சென்னையில் நேற்று நள்ளிரவில் மெரினா, பட்டினப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் திடீரென்று சுமார் 15 மீட்டருக்கு கடல் உள்வாங்கியது. சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக கடல் உள்வாங்கியது. இதன் காரணமாக, மணற்பரப்பு அதிக அளவில் தென்பட்டது.
நள்ளிரவில் கடற்கரைக்கு வந்திருந்த பொதுமக்கள் கடல் உள்வாங்கியதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தார்கள். அதற்கு பிறகு சுமார் அரை மணி நேரத்திற்குப் பின் மீண்டும் பழைய நிலைக்கு வந்தது. இதன் காரணமாக, அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் மிகப்பெரிய பீதி அடைந்து இருக்கிறார்கள்.
சென்ற இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது, இது ரிக்டர் அளவுகோலில் 2.6 ஆக பதிவானது. தொடர்ந்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதன் காரணமாக, இந்தியாவிலும் பாதிப்பு உண்டாகுமோ என்ற பயம் ஏற்பட்ட சூழ்நிலையில், எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை என்று இந்திய சுனாமி மையம் தகவல் தெரிவித்து இருந்த சூழ்நிலையில், கடல் திடீரென்று உள்வாங்கிய சம்பவம் சென்னை மக்களிடையே அச்சத்தையும், பரபரப்பையும் உண்டாக்கியிருக்கிறது..
அதேநேரம் இந்தோனேஷியாவில் நிலநடுக்கம் ஏற்பட்ட சமயத்தில் இந்தியாவில் அதிலும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மற்றுமொரு முக்கிய அம்சம் என்னவென்றால், கடந்த 2004ஆம் ஆண்டு இதே டிசம்பர் மாதத்தில் தான் இந்தியாவில் சுனாமி ஏற்பட்டு மிகப்பெரிய பேரழிவை கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.