கட்சத்தீவை மீட்பதே மீனவர் பிரச்சனைக்கு தீர்வாகும்… முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் மீனவர் மாநாட்டில் பேச்சு…
கட்சத்தீவை மீட்பதே தமிழக மீனவர்களின் பிரச்சனைக்கு தீர்வாகவும் முற்றுப்புள்ளியாகவும் அமையும் என்று தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் மீனவர் மாநாட்டில் பேசியுள்ளார்.
தமிழ்நாடு மாநில தலைமை மீன்வள கூட்டுறவு இணையம் மற்றும் மீனவ சங்கங்கள் இணைந்து நடத்தும் மீனவர் நல மாநாடு மற்றும் மீனவருக்கு நலத்திட்டங்கள் வழங்கும் விழா தற்பொழுது மண்டபத்தில் நடைபெற்று வருகின்றது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டார். மேலும் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன், அனிதா ராதாகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்சா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த மீனவர் நல மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் “தமிழ்நாடு மாநிலம் இந்திய அளவில் மீன்பிடி தொழிலில் ஐந்தாவது மாநிலமாக திகழ்ந்து வருகின்றது. பாஜக அரசு மீனவர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மறந்து செயல்பட்டு வருகின்றது. பாஜக அரசு ஆட்சி அமைத்த பின்னர் மீனவர்களுக்கு என்ன செய்தது?
பாஜக கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு மீனவர்கள் மீது 48 முறை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பாஜக ஆட்சி செய்த ஒன்பது ஆண்டுகளில் 619 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு மீனவர்களின் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு பாஜக அரசே பொறுப்பாகும்.
கச்சத்தீவை விட்டு கொடுத்ததற்கு திமுக அரசு தான் காரணம் என்று கூறுவதில் எந்தவித உண்மையும் இல்லை. கச்சத்தீவை இலங்கை நாட்டுக்கு விட்டுக் கொடுக்கக் கூடாது என்று அப்போது முதல்வராக இருந்த மறைந்த கலைஞர் கருணாநிதி அவர்கள் டெல்லி சென்று இந்திரா காந்தி அவர்களிடம் வலியுறுத்தினார். மேலும் கச்சத்தீவு இந்தியாவுக்கு சொந்தமானது குறிப்பாக இராமநாதபுரத்தின் எல்லைக்கு உட்பட்டது என்ற ஆதாரங்களை சேகரித்து இந்திய அரசிடம் வழங்கினார்” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் “இந்தியா இலங்கை அரசுடன் போட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். இல்லை என்றால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் அமையவுள்ள புதிய கூட்டணி நடவடிக்கை எடுக்கும். ஆகவே கட்சத்தீவை மீட்பதே தமிழக மீனவர்களின் பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளியாக இருக்கும்” என்று பேசினார்.