சட்டமன்ற உறுப்பினர்களை எச்சரித்த சபாநாயகர்! திமுக உறுப்பினர்கள் டென்ஷன்!!
தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்ட தொடர் கடந்த மாதம் முதல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2022 – 2023 ம் ஆண்டிற்கான பட்ஜெட் நிதி நிலை குறித்து அறிவிப்பு வெளியிட்டு பேசினார். இதனை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் துறை வாரியாக அத்துறையை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்.
இதனிடையே அவ்வப்போது சட்ட மன்றத்தில் ஆளும் திமுக உறுப்பினர்கள் மற்றும் எதிர் கட்சி உறுப்பினர்களின் நடவடிக்கை மற்றும் அவர்களது பேச்சு குறித்து சபாநாயகர் அப்பாவு அவ்வப்போது அவர்களை எச்சரிப்பது உண்டு.
சமீபத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி உறுப்பினர் வேல்முருகனை சபாநாயகர் அப்பாவு கடுமையாக எச்சரித்தார். அதில் பேரவைக்கு மிரட்டல் விடுக்கும் அளவிற்கு பேசுவது கூடாது, மீறினால் நடவடிக்கை எடுப்பேன் என எச்சரிக்கை செய்தது குறித்து வேல்முருகன் கடும் ஆட்சேபனை செய்தார்.
இதனிடையே வழக்கம் போல இன்று சட்டமன்ற கூட்டம் நடைபெற்று கொண்டிருக்கும் போது, திமுக உறுப்பினர் ஸ்டாலின் குமார் மீன்வளத்துறை குறித்து கேட்ட கேள்விக்கு அத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பதிலளித்து கொண்டிருந்தார். அப்போது திமுக உள்ளிட்ட மற்ற கட்சி உறுப்பினர்கள் இடம் மாறி அமர்ந்திருந்தனர்.
உறுப்பினர்களின் இந்த செயலை கண்ட சபாநாயகர் அப்பாவு, அவர்களை நோக்கி சட்டமன்ற நிகழ்வுகள் தற்போது நேரலையில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. மக்கள் அதனை பார்த்து கொண்டுள்ளனர். உங்கள் விருப்பத்திற்கு இடம் மாறி அமர்ந்து கொண்டு பேசாதீர்கள் என கடுமையாக அவர்களை கடிந்து கொண்டார். இந்த சம்பவம் தற்போது சட்ட மன்ற வளாகத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.