TVK Congress: இந்துத்துவ சக்தியை அழிக்க இந்தியாவுடன் கூட்டணி வைத்துக்கொள்ளுமாறு தமிழக காங்கிரஸ் தலைவர் விஜய்க்கு அழைப்பு விடுத்துள்ளார்.
விஜய் கட்சி தொடங்கி தனது முதல் மாநாட்டிலேயே அரசியல் எதிரி யார் என்பதை திட்டவட்டமாக தெரிவித்தார். குறிப்பாக “பிளவுவாத சக்திகளும் ஊழல் மலிந்த அரசியலும்” தான் நம் எதிரி என்று பொட்டில் அடித்தது போல் உரக்கச் சொன்னார். அந்த வகையில் அரசியல் களத்தில் ஒரு கூட்டம் யார் அரசியலுக்கு வந்தாலும் அவர்கள் மீது ஒரு வர்ணத்தை பூசி பாசிசம் பேசுகின்றனர். சிறுபான்மை பெரும்பான்மை என வேறுபட்டு காண்பித்து மக்கள் ஆட்சியாய் திராவிட மாடல் என கூறி ஏமாற்றுகின்றனர்.
இதையெல்லாம் உடைக்க வேண்டும் என்று கூறி திமுக மற்றும் பாஜக தான் அரசியல் எதிரி என வெளிப்படை தன்மையுடன் கூறினார். மேற்கொண்டு நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தங்களுடன் கூட்டணி வைத்துக் கொள்பவர்களுக்கும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என தெரிவித்தார். இவரின் ஒரு சில கொள்கைகள் ஆளும் கட்சியினரை தாக்கும் விதத்திலேயே அமைந்தது. அந்த விதத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கிடையே தொடர் புகைச்சலை தான் ஏற்படுத்தி வருகிறது.
ஒரு பக்கம் காங்கிரஸ், எப்பொழுதும் நாம் திமுகவை நம்பி இருக்கக் கூடாது தனித்து நிற்க வேண்டும் அப்பொழுதுதான் நமது பலம் என்னவென்று தெரியும் என கூறி வருகின்றனர். மறுபுறம் விசிக தோழமைக் கட்சி என வெளியே சொல்லிக்கொண்டு, தங்களிலிருந்து யாராலும் முதல்வராக முடியாது என மறைமுகமாகவே அவர்களை சுட்டிக்காட்டி பேசுகிறார். ஆளும் கட்சியின் இருகட்ட கூட்டணியும் பிரியும் நோக்கத்தில் உள்ளது.
இதனை தன்வசம் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்று தான் விஜய் எண்ணுகிறார். அதற்கேற்றார் போல் காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை இன்று செய்தியாளர்கள் மத்தியில் விஜய்க்கு அழைப்பு விடுத்துள்ளார். அதில், விஜய் தனது மாநாட்டில் மதவாத சக்திகளை ஒழிக்க வேண்டும் என கூறியுள்ளார். இதுதான் அவரது கொள்கையும் கூட, அதை செயல்படுத்த வேண்டுமென்றால் கட்டாயம் இந்தியா கூட்டணிக்கு வர வேண்டும்.
இது அவருக்கு மட்டுமின்றி அனைவருக்கும் நல்லது என தெரிவித்துள்ளார். திமுகவுடன் கூட்டணியில் இருக்கும்பொழுதே தமிழக காங்கிரஸ் தலைவர் இப்படி விஜய்க்கு அழைப்பு விடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கொண்டு விஜய் கூட்டணிக்கு ரெடி என்றால் கட்டாயம் திமுக-வை கைகழுவி விட்டுவிடும் என்பது இதன் மூலம் உணர முடிகிறது.