பள்ளிக்கு மது போதையில் வந்த ஆசிரியர் பணியிடை நீக்கம்! மாவட்ட கல்வி அதிகாரி நடவடிக்கை!!

Photo of author

By Rupa

பள்ளிக்கு மது போதையில் வந்த ஆசிரியர் பணியிடை நீக்கம்! மாவட்ட கல்வி அதிகாரி நடவடிக்கை!!

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் உள்ள ஆண் ஆசிரியர்கள் குடிபோதையில் பள்ளிக்கு வருவது, மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபடுவதும் வாடிக்கையான ஒன்றாக உள்ளது. இந்த சம்பவங்களை தடுப்பதற்கு அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருந்தாலும், அவ்வப்போது சில சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

சேலம் மாவட்டம் ஏற்காடு பகுதியில் 67 மலை கிராமங்கள் உள்ளன, அவற்றில் முளுவி என்ற கிராமமும் ஒன்று, அங்கு அரசு சார்பில் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக ஹரிஹரன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் சமீபகாலமாக பள்ளிக்கு வரும் போது மது போதையில் வருவதாகவும், மேலும் வகுப்புக்கு செல்லாமல் ஆசிரியர் அறையில் தூங்கி கொண்டு இருப்பார் என்றும், குடி போதையில் சில மாணவிகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி உள்ளார் என அவர் மீது புகார்  வந்ததை கல்வி அதிகாரிகள் விசாரித்து வந்தனர்.

இந்த நிலையில் கல்வி அதிகாரிகள் விசாரணையில் அவர் மீது வந்த புகார்கள் உண்மை என தெரிய வரவே, ஆசிரியர் ஹரிஹரன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட கல்வி அதிகாரி சந்தோஷ் தெரிவித்துள்ளார்.