பழக்கடையில் தினமும் பணத்தை திருடிய நூதன திருடன்! கண்காணிப்பு கேமராவை பார்த்த உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
தினமும் கடையில் வைத்த பணம் காணாமல் போனதால் கடையில் கண்காணிப்பு கேமராவை பொருத்திய உரிமையாளருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதில் பதிவான காட்சியைக் கண்டு அவர் திகைத்து போனார்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பழைய பேருந்து நிலையத்தில் மகேஷ் என்பவர் சொந்தமாக பழக்கடை நடத்தி வந்துள்ளார். இவர் தினமும் வியாபாரம் முடிந்ததும் கடையை மூடும் சமயத்தில் கல்லாப் பெட்டியில் 50, 100 ரூபாய் நோட்டுகளை போட்டுச் செல்வது வழக்கம். ஆனால் இரவில் அவர் வைத்துச் செல்லும் பணம் மறுநாள் காலையில் மாயமாகி உள்ளது.
இதேபோல தினமும் இரவில் கல்லாவில் போடும் பணம்மறுநாள் காலை காணாமல் போகும் சம்பவம் தொடர்ந்து நிகழவே அதிர்ச்சியடைந்த மகேஷ் அவரது கடையில் கண்காணிப்பு கேமராவைப் பொருத்தியுள்ளார். அதன்பின்னர் அதிகாலை 4 மணி அளவில் பணம் கணாமல் போவது தொடர்ந்துள்ளது. இதுபோல மீண்டும் தொடரவே திங்கள்கிழமை அதிகாலை 4 மணிசிசிடிவி காட்சி பதிவை ஆய்வு செய்துள்ளார்.
அதைக்கண்ட ஊழியர் கடுமையான அதிர்ச்சிக்கு ஆளானார். அந்த பதிவில் பழங்களுக்கு இடையே புகுந்து வந்த எலி கல்லாப் பெட்டியில் புகுந்து பணத்தை எடுத்துச் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. இதையடுத்து அவர் கடையில் உள்ள பொருட்களை நகர்த்தி பார்த்தபோது எலி எடுத்த பணத்தை எல்லாம் ஓரிடத்தில் சேர்த்து வைத்திருந்தது.
பின்னர் அதில் உள்ள பணத்தை சோதனை செய்யும் போது சுமார் 1500 ரூபாய் பணத்தை எலி எடுத்துச் சென்றது தெரிய வந்தது. சுந்தரா டிராவல்ஸ் படத்தில் ஒரு எலி நிறைய சேட்டைகள் செய்யும். அதுபோன்று இந்த எலி கடையில் உள்ள பழத்தை எடுக்காமல் பணத்தை எடுத்துச் சென்று எந்தவித சேதமும் இல்லாமல் பாதுகாத்து வைத்து இருந்தது அந்த பகுதியில் பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.