இவர்களிடம் பேச்சுவார்த்தையை ரத்து செய்தது அமெரிக்கா!

0
132

இவர்களிடம் பேச்சுவார்த்தையை ரத்து செய்தது அமெரிக்கா!

கடந்த 1996ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை கைப்பற்றிய தலிபான்கள் அதன் பின்னர் அங்கு கடுமையான சட்டங்களை கொண்டு வந்தனர். குறிப்பாக பெண்களுக்கு எதிரான சட்டங்கள் அங்கு கடுமையாக்கப்பட்டன.

அதன்படி அங்குள்ள பெண்கள் தலை முதல் கால் வரை மூடியிருக்கும் ஆடைகளையே அணிய வேண்டும். பெண்கள் கல்வி கற்கவோ, வேலைக்கு செல்லவோ கூடாது என பெண்களுக்கு எதிரான சட்டங்கள் கடுமையாக்கப்பட்டு அங்கு பெண்களுக்கான உரிமை முற்றிலும் பறிக்கப்பட்டன.

இதனிடையே கடந்த 2001ம் ஆண்டு அல்கொய்தா தீவிரவாதிகள் அமெரிக்கா மீது வான்வழி தாக்குதல் நடத்தின. இதனையடுத்து அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக கூறி அந்த தாக்குதல் நடைபெற்ற ஒரு மாதத்திற்குள்ளாகவே ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா படையெடுத்தது. அதன் பின்னர் அங்கு நடைபெற்று வந்த தலிபான்கள் ஆட்சியை அகற்றி ஜனநாயக முறையில் தேர்தல் நடத்தப்பட்டு வந்தது.

இந்த நிலையில் கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து அங்கு மீண்டும் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். இதையடுத்து பெண்கள் மற்றும் மாணவிகளுக்கு எதிராக பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டன.

இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு 12 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர், சிறுமிகள் பள்ளிக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதற்கிடையே, புதிய கல்வியாண்டு தொடங்கியதை தொடர்ந்து அந்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டன.

இதையடுத்து பள்ளிகளில் சிறுமியருக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி தலிபான் ஆட்சியாளர்கள் சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டனர். இருப்பினும் சிலமணி நேரத்தில் தலிபான்கள் தங்கள் முடிவை மாற்றி ஆறாம் வகுப்புக்கு மேல் பயிலும் சிறுமியருக்கு மீண்டும் பள்ளிகளில் தடை விதித்தனர்.

தலிபான்களின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ஆப்கானிஸ்தானில் பெண்கள் பள்ளிகள் மூடப்பட்டதன் எதிரொலியாக தலிபான்களிடம் நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளது என அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Previous articleமாநிலங்களவையில் கதறியழுத பாஜகவின் பெண் எம்பி! காரணம் என்ன?
Next articleஉரிய பணத்தை ‘கூகுள்’ நிறுவனம் அளிப்பதில்லை! ‘கூகுள்’ நிறுவனம் மீது புகார்!!