சாலையில் சென்ற போது தீப்பிடித்த வேன்! பூந்தமல்லியில் பரபரப்பு!
கடந்த சில நாட்களாகவே சாலையில் சென்று கொண்டிருக்கும் வண்டிகள் திடீரென தீப்பற்றி எரிவதை பற்றி செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. தரக்குறைவான உதிரிபாகங்கள் காரணமாக இருக்கலாம், என்று சொல்லி வரும் நிலையில், அதற்கான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அப்படி நேற்று கூட திருவேற்காட்டை சேர்ந்தவர் ரவிக்குமார். இவர் சிப்ஸ் கம்பெனி ஒன்றை நடத்தி வருகிறார். இவரது கம்பெனியில் கடைகளுக்கு எடுத்துச் செல்வதற்காக சொந்த லோடு வேன் ஒன்றை அவர் வைத்துள்ளார். இதனை சங்கர் என்பவர் ஓட்டி வந்துள்ளார். இவரது வயது 55 ஆகும். இந்நிலையில் நேற்று கூடுவாஞ்சேரியில் உள்ள கடைகளுக்கு டிப்ஸ்களை டெலிவரி செய்துவிட்டு லோடுவேன், திருவேற்காடு நோக்கி வந்துகொண்டிருந்தது.
அப்போது வண்டலூர் – மீஞ்சூர் வெளிவட்ட சாலை, பூந்தமல்லி அருகே வந்தபோது வாகனத்தின் மீது முன் பகுதியில் இருந்து திடீரென புகை வந்தது. அதை பார்த்த உடனே ஓட்டுனர் சுதாரித்து வாகனத்தை சாலையின் ஓரமாக நிறுத்தி கீழே இறங்கி விட்டார். அவர் இறங்கிய சிறிது நேரத்தில் எல்லாம் லோடு வேன் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் பூந்தமல்லியில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
இருந்த போதும் வேன் முற்றிலும் எரிந்து போனது. சம்பவ இடத்திற்கு வந்த மாங்காடு போலீசார் தீயில் சேதமடைந்த வேனை கிரேன் மூலம் அப்புறப்படுத்தினர். மேலும் தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர். மேலும் விற்பனை செய்ததில் கிடைத்த பணம் 20,000 ரூபாயும் தீயில் கருகியதாக கூறப்படுகிறது.