பாலியல் தொழிலுக்கான இணையதளம் முடக்கப்படும்!! போலீசார் அதிரடி!!
சென்னையில், நல்ல சம்பளத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி இளம்பெண்களை வரவழைத்து, அவர்களை வலுக்கட்டயமாகவோ அல்லது அவர்களின் மனதை மாற்றியோ பாலியல் தொழிலில் ஈடுபடுத்துகிறார்கள். இந்த பெண்களை மசாஜ் சென்டர், தங்கும் விடுதிகள் போன்றவற்றில் வேலை என கூறி வரவழைக்கின்றனர். இது போன்ற கும்பல்களை பிடிக்க காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
மசாஜ் சென்டர், விடுதிகள், மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் விபச்சார தடுப்பு பிரிவு போலீசார், தொடர்ச்சியாக கண்காணித்து பாலியல் தொழிலில் ஈடுபட்டு வரும் பல தரகர்களை கைது செய்து வருகின்றனர். இதன்படி கடந்த ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் வரை 55 தரகர்களை கைது செய்து, 94 பெண்களை இந்த விபச்சாரத்தில் இருந்து மீட்டுள்ளனர்.
இது தொடர்பாக 35 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருகிறது. அதேபோல் இந்த பாலியல் தொழிலில் ஈடுபடும் தரகர்கள் தற்போது சமுக வலைதளங்கள் மூலமாகவே வாடிக்கையாளரை வரவழைக்கின்றனர். லொகாண்டோ, ஜஸ்ட் டயல், விவா போன்ற இணையதளங்களை தரகர்கள் பயன்படுத்துகிறார்கள்.
இவர்களின் எண்ணிக்கையும், விபச்சார தொழிலும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வதால், விபச்சார தடுப்பு போலீசார் இந்த இணையதளங்களை முற்றிலுமாக முடக்க சைபர்கிரைம் மூலமாக நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனர்.
மேலும் இந்த இணையதளங்களை முடக்க மத்திய அரசின் எலக்ட்ரானிக் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறைக்கும், கூகுள் நிறுவனத்திற்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த இணையதளங்களின் மீது நடவடிக்கை எடுத்து அதை முடக்குவதற்கு தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சேவை துறை செயலாளருக்கும் போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதன் மூலம் பாலியல் இணையதளங்கள் முடக்கப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது.