கணவரை பிரிந்து வாழ்ந்த பெண்! வேறு ஒருவருடன் ஏற்பட்ட காதலினால் பெற்றோர் கொடுத்த தண்டனை! வழக்கை மாற்றிய போலீசார்!
ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி அருகே உள்ள நடுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தென்னரசு. இவரது மகள் கவுசல்யா. 23 வயதான கௌசல்யாவிற்கும், செவ்வூர் கிராமத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு பெற்றோரால் திருமணம் செய்து வைக்கப்பட்டது. இந்நிலையில் கணவன் மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.
அதன் காரணமாக கணவரிடமிருந்து பிரிந்து தனது தாய் வீட்டிலேயே வந்து தங்கினார். இந்த பிரிவு சமீபத்தில்தான் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கௌசல்யா பெற்றோர் வீட்டிற்கு அருகில் உள்ள வேறு ஒரு சமூகத்தை சேர்ந்த திருமணம் ஆகாத ஒரு வாலிபரை காதலித்து வந்துள்ளார். மேலும் அவருடன் ஊர் சுற்றியதாகவும், வெளியிடங்களுக்குச் சென்று வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த விஷயம் கௌசல்யாவின் பெற்றோருக்குத் தெரியவே அவர்கள் கௌசல்யாவை கண்டித்துள்ளனர். ஆனால் கௌசல்யா இதை ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால் பெற்றோருக்கும், கௌசல்யாவிற்கும் வாக்குவாதங்கள் நடந்துள்ளது. இந்நிலையில் கடந்த 16 ஆம் தேதி வீட்டில் இருந்த கௌசல்யா எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக அவரது பெற்றோர்கள் பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு சிகிச்சை நடைபெற்றுக்கொண்டிருந்தது. சிகிச்சை நடந்து கொண்டிருந்த சமயத்திலேயே இரண்டு நாட்கள் கழித்து மருத்துவமனையிலிருந்து, மேலும் அங்கு யாரிடமும் சொல்லாமல் கௌசல்யாவை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். மேலும் அங்கு அவர் தற்கொலை செய்து கொண்டார் என கூறி கௌசல்யாவின் உடலை போலீசாருக்கும், அதிகாரிகளுக்கும் தெரிவிக்காமலேயே எரிக்கவும் செய்துள்ளனர்.
மேலும் இது குறித்த தகவல் அந்த ஊரின் கிராம நிர்வாக அதிகாரியான ஹேமாவுக்கு தெரியவந்துள்ளது. அதன் காரணமாக அவர் பரமக்குடி போலீசாரிடம் புகார் தெரிவித்தார். அதனை அடிப்படையாக வைத்து போலீசார் கௌசல்யாவின் மரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும் கடந்த இரண்டு நாட்களாக இந்த பிரச்சினை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது.
அதனை தொடர்ந்து பரமக்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு வேல்முருகன் தலைமையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போதுதான் இந்த விஷயங்கள் எல்லாம் போலீசாருக்கு தெரியவந்தது. மேலும் இதை கொலை வழக்காக பதிவு செய்து கௌசல்யாவின் தந்தை தென்னரசு மற்றும் தாய் அமிர்தவள்ளி ஆகியோரை கைது செய்தனர்.
மேலும் பெற்ற மகளை கொன்றதன் காரணமாக அவர்களை மேலும் போலீசார் விசாரித்து வருகின்றனர். அதனை தொடர்ந்து கௌசல்யாவின் உடலை எரிப்பதற்கு வேறு யாரேனும் உதவி செய்தார்களா? அல்லது இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது போன்ற விசாரணையும் நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும் இந்த வழக்கு முதலில் தற்கொலை வழக்காக பதிவு செய்யப்பட்ட நிலையில் தற்போது கொலை வழக்காக மாற்றி தாய் மற்றும் தந்தையை கைது செய்து உள்ளனர். இந்த வழக்கு அந்த பகுதியில் உள்ள அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.