பழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான தேரை 45 லட்சம் ரூபாய் மதிப்பில் சீரமைக்கும் பணி!
பழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான தேரை, 45லட்சம் ரூபாய் மதிப்பில் சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. வரும் தைப்பூசத் திருவிழாவிற்குள் பணிகளை நிறைவு செய்யப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் உள்ளிட்ட திருவிழாக்கள் வெகு விமரர்சையாக கொண்டாடப்படும். இதில் தைப்பூசம், வைகாசி விசாகம் திருவிழாக்களின் போது பழனி நான்கு ரதவீதிகளிலும், பங்குனி உத்திரத்தின் போது அடிவாரம் நான்கு கிரி வீதிகளிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து இழுக்க தேரோட்டம் நடைபெறும்.
இந்நிலையில் பெரியநாயகி அம்மன் கோவில் அருகே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தேரை சீரமைக்கும் பணி துவங்கியுள்ளது. பெரிய தேரில் சில பகுதிகள் சேதமடைந்திருப்பதை தொடர்ந்து, தேரை சீரமைக்க கோவில் சார்பில் முடிவு செய்யப்பட்டு 45லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கி உள்ளது.
முதற்கட்டமாக தேர் சீரமைப்புக்கான பெரிய விட்டங்கள் கொண்டு வரப்பட்ட, தேர் சீரமைப்பிற்கான தச்சு பணிகள் தொடங்கியுள்ளது. பழனி பெரியநாயகி அம்மன் கோவில் வளாகத்தில் நடைபெற்றுவரும் தேர் சீரமைப்பு பணிகளுக்காக பெரிய அளவிலான இழுப்பை மரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
தேரின் சக்கரம் தவிர மற்ற அனைத்து பகுதிகளும் புதுப்பிக்கும் பணியில் சேலத்தை சேர்ந்த தச்சு பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, வரும் தைப்பூசத் திருவிழாவின் போது தேரோட்டத்திற்கு பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.