உலகமே தற்போது இந்த நிலையில்தான் உள்ளது! உலக சுகாதார அமைப்பின் எச்சரிக்கை!
கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து சீனாவின் மூலம் வெளிவந்த கொரோனா வைரஸ் நோய்த் தொற்றானது உலகம் முழுவதிலும் பரவி நாட்டு மக்கள் அனைவரையும், உலக மக்கள் அனைவரையும் மிகப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதனை எதிர்கொள்ள மருத்துவர்களும், மருத்துவ உலகமும் தொடர்ந்து தடுப்பூசிகளை கண்டுபிடித்த நிலையில் கொரோனவைரஸ் தொடர்ந்து மாற்றத்திற்கு உள்ளாகிறது.
இந்த உருமாற்றம் அடைந்த கொரோனா மற்றும் அதன் தீவிரத்தை கணிக்க முடியாத நிலையும் உருவாகியுள்ளது. பொதுவாக வைரஸ் கிருமிகள் என்பது தங்கள் சுற்றுப்புறச் சூழலைப் பொறுத்து உருமாற்றம் அடையும். அதில் சில வைரஸ்கள் சுற்றுப்புற சூழலின் காரணமாக பலமிழந்து வைரஸ் தானாகவே அழிந்துவிடும். ஆனால் இந்த கொரோனா வைரஸ் ஆனது ஒவ்வொரு முறை உருமாற்றம் அடையும் போதும், ஒன்றைவிட மற்றொன்று ஆபத்தானதாகவும், வீரியம் மிகுந்ததாகவும் இருக்கின்றது.
அந்த வகையில் கொரோனா வைரஸ் அது கண்டறியப்பட்ட காலத்தில் இருந்து தற்போது வரை பல்வேறு நாடுகளில் ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா மற்றும் டெல்டா ப்ளஸ் என தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வருகிறது. இதில் முதல் வகையான ஆல்பா வகை கொரோனா முதல் முதலாக இங்கிலாந்தில் கடந்த 2020 செப்டம்பர் மாதம் கண்டறியப்பட்டது. அதன்பின் இதுவரை 172 நாட்கள் நாடுகளில் ஆல்பா வைரஸ் பரவி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதை போலவே பீட்டா வகை கொரோனா நாம் முதன் முதலில் தென் ஆப்பிரிக்காவில் கடந்த 2020 ல் ஆகஸ்ட் மாதம் முதல் கண்டறியப்பட்டது. இது அந்த நாட்டில் பல பாதிப்புகளை ஏற்படுத்தியது. அதேபோல் இந்த வைரஸ் இதுவரை 120 நாடுகளில் பரவி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதனை தொடர்ந்து வந்த காமா வகை முதல் முதலாக பிரேசில் நாட்டில் உள்ள மாநகரில் கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கண்டறியப்பட்டது.
இந்த வகை கொரோனா பிரேசில் நாட்டில் முதன் முதலில் கண்டறியப்பட்டது. இந்த கொரோனா பாதிப்பு அங்கு பல மடங்கு அதிகரித்ததோடு ஆக்சிஜன் தட்டுப்பாடும் ஏற்பட ஒரு காரணமாக அமைந்தது. இந்த வகைக் கொரோனா தற்போது உலகம் முழுவதிலும் 72 நாடுகளில் பரவி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.
அதற்கு அடுத்ததாக இந்தியாவில் மிக வேகமாக பரவும் டெல்டா வகை வைரஸ் கண்டறியப்பட்டது. இது அதிக உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த டெல்டா வகை கொரோனா இதுவரை உலகம் முழுவதிலும் 96 நாடுகளில் பரவியுள்ளது. இது மற்ற வகைகளை விட 55 சதவிகிதம் அதிக பரவும் தன்மை கொண்டது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வகையை தொடர்ந்து தற்போது டெல்டாபிளஸ் கொரோனாவும் மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இதற்கிடையே மருத்துவ உலகமும், மருத்துவர்களும் கண்டுபிடித்துள்ள தடுப்பூசிகள் இந்த உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் களுக்கு எதிராக எந்த அளவு எதிர்ப்பு திறனை கொண்டிருக்கும் என்ற கேள்வி அனைவருக்கும் எழுந்துள்ளது. இது குறித்து சில தடுப்பூசி நிறுவனங்கள் கூறுகையில், தங்களின் நிறுவனம் தயாரித்த மருந்துகள் புது வைரசை எதிர்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டு இருப்பதாக சான்றளிக்கின்றன.
இருப்பினும் இதுகுறித்து ஆய்வு செய்ய பல தரவுகள் தேவை என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் செய்தியாளர்களின் சந்திப்பில், கொரோனா வைரஸ் போல உருமாற்றம் அடையும் வைரஸ் வகையினால் உலகமே தற்போது ஆபத்தான காலகட்டத்தில் இருக்கிறதாக எச்சரித்துள்ளார்.
இந்த ஆபத்திற்கு எந்த ஒரு நாடும் விதிவிலக்கல்ல, என்றும் டெல்டா வகை கொரோனா தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வருவதால் அது குறித்த விரிவான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டியது கட்டாயம் என்றும் அவர் கூறியுள்ளார். அதேசமயம் தடுப்பூசிகள், மருத்துவ உபகரணங்கள், ஆகியவற்றை உலக நாடுகளுக்கு பகிர்ந்து கொள்வதன் மூலம் நாம் இந்த பாதிப்புகளை ஒற்றுமையாக கட்டுப்படுத்த முடியும் எனவும் தெரிவித்தார். இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் அனைத்து நாடுகளிலும் குறைந்தபட்சம் 10 சதவிகித மக்களாவது தடுப்பூசி போட்டுக் கொண்டதை உலக நாடுகளின் தலைவர்கள் உறுதி செய்ய வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.