சீமராஜா பட பாணியில் நாயை வைத்து இளைஞர்கள் செய்த சம்பவம்!! பீதியில் உறைந்த மக்கள்!!
தமிழகத்தில் வனப்பகுதிகளை ஒட்டியுள்ள கிராமங்களுக்குள் அடிக்கடி யானை, சிறுத்தை மற்றும் காட்டு மாடு போன்ற வன விலங்குகள் நுழைவது வழக்கம். அதுவும் தற்போது நிலவி வரும் கடுமையான வெப்பம் காரணமாக தண்னீர் தேடி வன விலங்குகள் அதிகமாக ஊருக்குள் நுழைந்து வருகின்றன.
சமீபத்தில் கூட அரியலூர், தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கூறப்பட்டது. இருப்பினும் ஒரு மாதத்திற்கு மேலாகியும் அந்த சிறுத்தையை பிடிபடாமல் வனத்துறையினருக்கு போக்கு காட்டி வருகிறது. இப்படி அடிக்கடி ஊருக்குள் வனவிலங்குகள் நுழைந்து வருவதால் மக்கள் ஆங்காங்கே அச்சத்தில் உள்ளனர்.
இந்நிலையில், புதுச்சேரியை சேர்ந்த சில இளைஞர்கள் செய்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். அதன்படி, புதுச்சேரி லாஸ்பேட்டை குறிஞ்சி நகர் பகுதியை சேர்ந்த சில இளைஞர்கள் நாய்க்கு புலி வேடமிட்டு வீதியில் நாயை உலாவ விட்டுள்ளனர். அதனை கண்ட மக்கள் ஊருக்குள் புலி வந்துவிட்டதாக நினைத்து அலறியடித்து ஓடியுள்ளனர்.
பின்னர் தான் அது புலி வேடமிடப்பட்ட நாய் என்பது தெரிய வந்தது. பொதுமக்களை பயமுறுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு இதை செய்த இளைஞர்கள் அதை வீடியோவாகவும் எடுத்து சோசியல் மீடியாவில் பரப்பியுள்ளனர். இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான சீமராஜா படத்தில் இதேபோன்ற ஒரு காட்சி வரும். அதில் சிவகார்த்திகேயன் அவரின் நாய்க்கு சிறுத்தை வேடமிட்டு ஊருக்குள் உலாவ விடுவார். அதே பாணியில் தற்போது புதுச்சேரியில் ஒரு சம்பவம் நடந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.