தஞ்சாவூர் தேர் விபத்து! விளக்கமளிக்க வார்த்தைகளில்லை முதலமைச்சர் ஸ்டாலின் பேட்டி!

Photo of author

By Sakthi

தஞ்சாவூர் அருகேயுள்ள களிமேடு என்ற கிராமத்தில் நடைபெற்ற தேர் திருவிழாவில் தேர் மீது மின்கம்பி உரசியதால் தேர் தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தில் 11 பேர் பலியாயினர், 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்த சம்பவத்தை கேள்வியுற்றவுடன் பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், உள்ளிட்டோர் இரங்கல் செய்தியை வெளியிட்டதோடு மத்திய அரசின் சார்பாக உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 2 லட்சம் ரூபாய் பிரதமரின் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார் பிரதமர் நரேந்திர மோடி.

இந்த தேர் விபத்துச் சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. அதோடு உயிரிழந்தவர்களின் உடல்களை பெறுவதற்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வருகை தந்திருந்த உறவினர்கள் கதறியழுத சம்பவம் காண்போர் நெஞ்சை கலங்கடிக்கும் விதத்தில் இருந்தது.

இந்த நிலையில், விபத்து நடைபெற்ற களிமேடு பகுதிக்கு தகவல் அறிந்தவுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் காவல்துறையின் உயர் அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

இந்த தகவலறிந்தவுடன் முதலமைச்சர் ஸ்டாலின் சட்டசபையில் இருந்தபடியே அவர்களுக்கு இரங்கல் தெரிவித்ததோடு சட்டசபையில் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதோடு சட்டசபை அலுவல்களை முடித்துக் கொண்டு நேரடியாக விபத்து நடைபெற்ற களிமேடு கிராமத்திற்கு நேரில் சென்று விபத்து நடைபெற்ற இடத்தையும் மற்றும் விபத்தில் உயிரிழந்தவர்களின் வீட்டிற்கு சென்று அவர்களுக்கு நேரில் அஞ்சலி செலுத்தியதோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தார்.

மேலும் சட்டசபையில் அறிவித்தபடி உயிரிழந்தவர்களுக்கு அரசு சார்பாக 5 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கினார். மேலும் காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் நிதியுதவியும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு 25 ஆயிரம் நிதி உதவியும், முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.

இந்த சூழ்நிலையில், தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் தேர் விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

அப்போது அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார், பத்திரிக்கையாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு கிராமத்தில் நடைபெற்ற திருவிழாவின் போது மின்சாரம் தாக்கிய விபத்தில் 11 பேர் உயிரிழந்தார்கள் தாங்க முடியாத துயரம்.

இந்த துயரத்தை விளக்குவதற்கு வார்த்தைகள் என்னிடமில்லை இந்த செய்தியை கேள்விப்பட்டு மிகுந்த மன வேதனையடைந்தேன். உடனடியாக மீட்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்று அமைச்சர்கள் மற்றும் சட்ட சபை உறுப்பினர்களுக்கு உத்தரவிட்டதோடு அதிகாரிகள் மற்றும் அரசு அலுவலர்கள் என்று எல்லோருக்கும் அந்தந்த துறை சார்ந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிடபட்டது.

தொடர்ந்து சட்டசபையில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என தெரிவித்திருக்கிறார்.

அதோடு பலியானோரின் குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினேன், மேலும் தஞ்சை மண்ணின் மைந்தன் என்ற முறையில் நான் அவர்களுடைய துயரத்தில் பங்கு எடுத்துக் கொண்டுள்ளேன்.

அதோடு விபத்தில் பலியானவர்களுக்கு அரசு சார்பாக 5 லட்சம் ரூபாய் மற்றும் திமுக தரப்பில் 2 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது.

விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெறுபவர்களுக்கு உயர் சிகிச்சை வழங்க வேண்டும் என்றும் மருத்துவர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.

அதோடு படுகாயமடைந்தவர்களுக்கு அரசு சார்பாக 1 லட்சம் ரூபாயும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும், நிவாரணத் தொகையாக வழங்கப்படுகிறது. திமுகவின் சார்பாக காயமடைந்தவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து தொடர்பாக சரியான காரணத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும், எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துக்களை தடுப்பதற்காகவும் என்ன வழிமுறை இருக்கிறது என்பதை ஆய்வு செய்து அறிக்கை வழங்குவதற்காக வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த் தலைமையிலான குழு அமைக்கப்பட்டிருக்கிறது என தெரிவித்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

இந்த நிகழ்வை அரசியலாக்க வேண்டும் என்று சிலர் நினைத்திருக்கிறார்கள். இதனை அரசியலாக்க கூடாது என்பதுதான் என்னுடைய எண்ணம்.

போற்றுவார், தூற்றுவார் பற்றி நான் கவலைப்படுவது கிடையாது. பொதுமக்களுக்கு துயரம் உண்டாகாமல் காக்கவும் ,அதனை மீறி இதுபோன்ற துயரங்கள் ஏற்படும் போது மக்களோடு இருக்க வேண்டும் என்பதுதான் இந்த அரசின் நோக்கம்.

அதனை நோக்கி பயனிப்போம் விசாரணைக்கு பிறகு முழுமையான தகவல்கள் வழங்கப்படும். விபத்து குறித்து அறநிலையத்துறை, மின்சாரத் துறை, அமைச்சர்கள் ஏற்கனவே விளக்கமளித்திருக்கிறார்கள் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.