மதிமுகவின் சொத்து பட்டியலை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டிய அவசியம் இல்லை – வைகோ பேட்டி!

0
266
#image_title

மதிமுகவின் சொத்து பட்டியலை வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டிய அவசியம் இல்லை என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

மதிமுக வின் 30 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ கட்சியின் தலைமை அலுவலகமான தாயகத்தில் பட்டாசு வெடித்து கொடி ஏற்றி இனிப்புகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

மதிமுக வின் 30 ஆம் ஆண்டு தொடக்க விழாவை தொண்டர்கள் தங்கள் குடும்ப விழாவாக தமிழகம் முழுவதும் கொண்டாடி வருகிறார்கள் என வைகோ தெரிவித்தார். இனி வருகிற சோதனைகள் அனைத்தையும் முறியடித்து மதிமுக வெற்றி கொடியை நாட்டுவோம் என வைகோ நம்பிக்கை தெரிவித்தார்.

திராவிட மாடல் காலாவதியாகிவிட்டது என தமிழக ஆளுநரின் பேச்சுக்கு பதில் அளித்த வைகோ, காவல் துறையில் காலாவதியான மனிதர் தமிழகத்தில் வந்து குழப்பம் செய்து கொண்டிருக்கிறார் என காட்டமாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய வைகோ தமிழக ஆளுநர் பேசுவது உளறல் மேல் உளறாலாக உள்ளது.அவர் ஆளுநர் பதவிக்கு லாய்க்கு அற்றவர். ஆளுநர் பதவியில் இருக்க ஆர்.என்.ரவிக்கு எந்த தகுதியும் இல்லை, அவர் வேண்டுமானால் பாஜக, இந்து அமைப்புகளுக்கு பிரதிநிதியாக இருக்கலாம். இந்தியாவில் இதுவரை எந்த ஆளுநரும் இது போன்ற தவறுகளை செய்தது கிடையாது.

திமுக ஆட்சி இரண்டு ஆண்டுகள் நிறைவு செய்துள்ள நிலையில் தமிழகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி இதுவரை இல்லாத வகையில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து வருகிறது என புகழாரம் சூட்டினார்.

மதிமுகவில் சொத்து பட்டியலை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என திருப்பூர் துரைசாமி கேள்வி எழுப்பியிருந்த நிலையில் அதற்கு பதிலளித்த வைகோ, மதிமுகவின் சொத்து குறித்த விவரங்கள் அனைத்தும் ஆடிட்டர் மூலமாக முறையாக தணிக்கை செய்யப்பட்டு கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை எந்த கட்சி, தன் சொத்து பட்டியல் தொடர்பான வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ளது, மதிமுக மட்டும் ஏன் வெளியிட வேண்டும் எனவும் பதில் கேள்வி எழுப்பியுள்ளார் .

Previous articleகுழந்தைகளின் பள்ளிகளை மூடுவதா? திமுக அரசுக்கு அதிமுக பொதுச்செயலாளர் கடும் கண்டனம்
Next articleசமையல் எண்ணெய் விலை குறைகிறது!! மக்கள் மகிழ்ச்சி!!