தமிழகம் முழுவதும் நோய்த்தொற்று பரவல் காரணமாக, பல்வேறு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. அதன் வரிசையில் பத்தாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு எல்லோரும் தேர்ச்சி ஆனதாக அறிவிக்கப்பட்டது.இதனையடுத்து பனிரெண்டாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு பின்னர் நடத்தப்படும் என்று தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வையும் ஒத்தி வைத்து இருக்கிறது தமிழக அரசு.
இவ்வாறு பல்வேறு தேர்வுகள் இந்த நோய்த்தொற்று தாக்கம் காரணமாக தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு இருக்கின்றன.இந்த சூழ்நிலையில், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அவர்களுக்கு மதிப்பெண் வழங்குவதற்கு ஏதுவாக பள்ளி அளவில் தேர்வு நடத்துவதற்கு பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டு இருப்பதாக ஒரு தகவல் வெளியானது.
ஆனால் இந்த தகவல் உண்மை கிடையாது என்று திட்டவட்டமாக மறுத்துவிட்ட தமிழக பள்ளிக்கல்வித்துறை அவ்வாறு தேர்வு நடத்தும் திட்டம் எதுவும் இல்லை என்று விளக்கம் அளித்திருக்கிறது. இதுபோன்ற தவறான தகவலை வெளியிட்டு மாணவர்களையும், பெற்றோர்களையும், குழப்பமடைய செய்ய வேண்டாம் என்றும் பள்ளிக் கல்வித் துறை தெரிவித்திருக்கிறது.