மத்திய அரசின் அறிவுறுத்தல்படி விரைவில் இவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது!

Photo of author

By Parthipan K

மத்திய அரசின் அறிவுறுத்தல்படி விரைவில் இவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது!

மத்திய அரசு அனுப்பிய 12 முதல் 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கான ‘கோர்பேவேக்ஸ்’ தடுப்பூசியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அதன்பின், அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்:-

இந்தியாவில் கடந்த 11 ஆண்டுகளாகவும், தமிழகத்தில் கடந்த 18 ஆண்டுகளாகவும் போலியோ இல்லாத நிலை இருந்து கொண்டிருக்கிறது. அந்தவகையில், தமிழகத்தில் இந்த ஆண்டு வருகிற 27-ந் தேதி போலியோ முகாம்கள் நடைபெற இருக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் 15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மத்திய அரசு 12 முதல் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு ‘கோர்பேவேக்ஸ்’ என்ற புதிய தடுப்பூசியை அங்கீகரித்துள்ளது. எனவே, இவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் வகையில் மத்திய அரசு 21 லட்சத்து 66 ஆயிரம் தடுப்பூசிகளை ஒதுக்கீடு செய்துள்ளது.

அதில் 3 லட்சத்து 89 ஆயிரம் ‘கோர்பேவேக்ஸ்’ தடுப்பூசிகள் வந்துள்ளன. அந்த தடுப்பூசிகளை தற்போது ஆய்வு செய்துள்ளோம். 12 முதல் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு எப்போது தடுப்பூசி போட வேண்டும் என்ற வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு முறையாக அறிவித்தவுடன் அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும்.

இந்த தடுப்பூசியை பொருத்தவரை, கோவேக்சின் தடுப்பூசியை போல, முதல் தவணை செலுத்தி 28 நாட்கள் கழித்து இரண்டாவது தவணை செலுத்தப்படும். மத்திய அரசு அனுமதித்ததும், பள்ளிகளில் முகாம்கள் அமைத்து தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படும்.

27-ந் தேதி நடைபெறும் போலியோ சொட்டு மருந்து முகாமையொட்டி, அதற்கான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளபட வேண்டி இருப்பதால், சனிக்கிழமை நடைபெற இருந்த 23-வது மெகா தடுப்பூசி முகாம் அடுத்த வாரம் தள்ளி வைக்கப்படுகிறது என அவர் தெரிவித்துள்ளார்.