பைக் ஓட்டினால் பணம் தருவதாக கூறினார்கள் அதனால் செய்தேன்!

Photo of author

By Hasini

பைக் ஓட்டினால் பணம் தருவதாக கூறினார்கள் அதனால் செய்தேன்!

சென்னை உட்பட தமிழகம் முழுவதும் வங்கி ஏ.டி.எம் மையங்களை குறிவைத்து கடந்த மாதம் 17 முதல் 19ஆம் தேதி வரை 1 கோடி வரையிலான பணம் திட்டம் போட்டு நூதன கொள்ளை சம்பவங்கள் நடந்தேறின. தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் எஸ்பிஐ ஏடிஎம் மையங்களை மட்டுமே குறிவைத்து இந்த கொள்ளை சம்பவங்கள் நடந்தேறின. மிக நுட்பமாக  நூதன முறையில் ஒரு கோடிக்கு மேல் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

அதுவும் வங்கிக்கு மக்கள் பணம் செலுத்தும் மெஷின் வழியாக இந்த நூதன கொள்ளையை நடத்தியுள்ளனர். இதனை விசாரிக்கும் போது பல பேர் இந்த குற்றத்தில் தொடர்பு உள்ளது தெரிய வந்தது. அதில் தற்போது 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னையில் 15 ஏடிஎம் மையங்களில் மட்டும் 50 லட்சம் கொள்ளை போனதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டது. அதுவும் வெளியில் யாருக்கும், வங்கி ஊழியர்களுக்கு கூட தெரியாத வண்ணம் மிக நுட்பமான முறையில் இந்த கொள்ளை சம்பவம் நடந்தேறியது.

இந்தக் கொள்ளையில் தொடர்புடைய அரியானா மாநிலத்தை சேர்ந்த அமீர் அர்ஷ் மற்றும் அவனது கூட்டாளி வீரேந்திர ராவத் மற்றும் நஜீம் உசேன் ஆகியோரை போலீசார் தற்போது ஒருவர் பின் ஒருவராக கைது செய்தனர். இந்நிலையில் ஏடிஎம் கொள்ளையன் வீரேந்திர ராவத்தின்  வாக்குமூலத்தை போலீஸார் வீடியோ பதிவு செய்தனர்.

அதில் வீரேந்திர ராவத் தன்னிடம் நீ தமிழகம் வந்து இரண்டு சக்கர வாகனம் ஓட்டினால் மட்டும் போதும் உனக்கு ஒரு லட்ச ரூபாய் தருவதாக கூறி அமீர் அர்ஷ் கூறினார் என்று கூறினார். மேலும் தான் ஏழாம் வகுப்பு வரை மட்டுமே படித்து உள்ளதாகவும், தனக்கு ஏடிஎம் இயந்திரத்தை பற்றிய விவரங்கள் எதுவும் தெரியாது எனவும், அந்த வாக்குமூலத்தின் மூலம்  அவன் தெரிவித்தான். மேலும் தான் ஒரு பிளம்பர் ஆக வேலை செய்வதாகவும் விசாரணையின்போது தெரிவித்தான்.