திருப்பதி திருமலையில் அதிமுக எம்.எல்.ஏ உட்பட நான்கு தமிழர்களுக்கு பதவி! ஆந்திர அரசு அரசாணை.

Photo of author

By Parthipan K

தமிழகத்தைச் சேர்ந்த நான்கு பேர் உட்பட 28 பேர் திருப்பதி திருமலை தேவஸ்தான அறங்காவலர் குழுவில் நியமிக்கப்பட்டதற்கான அரசாணையை ஆந்திர அரசு நேற்று (செப்., 18) வெளியிட்டது.

இதில் தமிழகத்திலிருந்து வைத்தியநாதன், இந்தியா சிமென்டஸ் தலைவரும் சென்னை கிங்ஸ் உரிமையாளருமான என்.சீனிவாசன், மருத்துவர் நிச்சிதா மற்றும் அதிமுகவின் உளுந்துார் பேட்டை சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு உள்ளிட்டோர் திருப்பதி அறங்காவலர் குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

ஆந்திராவில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அரசு பதவியேற்ற பின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவால் ஏற்படுத்தப்பட்ட திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கலைக்கப்பட்டது. அதன்பின் புதிய அரசு அறங்காவலர் குழு தலைவராக சுப்பா ரெட்டியை நியமித்தது. இவர் பதவி ஏற்று இரண்டு மாதங்கள் ஆன நிலையில் புதிய அறங்காவலர் குழு உறுப்பினர்களை நேற்று ஆந்திர அரசு நியமித்து அரசாணை வெளியிட்டது.

இதற்கு முன் 16 உறுப்பினர்களுடன் இருந்த அறங்காவலர் குழுவை தற்போதைய ஜெகன்மோகன் தலைமையிலான அரசு 24 ஆக உயர்த்தியுள்ளது. இவர்களுடன் ஆந்திர அறநிலையத்துறை தலைமை செயலர், அறநிலையத் துறை கமிஷனர், தேவஸ்தான செயல் அதிகாரி, திருப்பதி நகர்புற வளர்ச்சி கழகத்தின் தலைவர் ஆகியோரும் அறங்காவலர் குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆந்திராவிலிருந்து எட்டு பேர்; தெலுங்கானாவிலிருந்து ஏழு பேர்; தமிழகத்திலிருந்து நால்வர்; கர்நாடகாவிலிருந்து மூவர்; தில்லி மகாராஷ்ட்ராவிலிருந்து தலா ஒருவர் என்ற மொத்தம் 28 உறுப்பினர்களுக்கு பதவியை வழங்கியது ஆந்திர அரசு.