திருவாரூரில் அனைத்து நியாய விலைக் கடைகளும் செயல்படாது..! ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

Photo of author

By Parthipan K

பெண் ஊழியரை தாக்கியவரை கைது செய்யக்கோரி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நியாய விலைக் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஒன்றியம், தொண்டியக்காடு தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தின் கட்டுபாட்டில் இயங்கும் நியாய விலைக் கடையில் விற்பனையாளராக சித்ரா என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்த கூட்டுறவு சங்கத்தின் தலைவர் அதிமுகவை சேர்ந்த உலகநாதன் என்பவர், சித்ராவை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சித்ரா முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சித்ரா அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தநிலையில், பெண் ஊழியர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்தும், அதற்கு காரணமான கூட்டுறவு சங்க தலைவர் உலகநாதனை கைது செய்யக்கோரியும் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நியாய விலைக் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு நியாய விலைக் கடை பணியாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் குணசீலன் தலைமை தாங்கினார்.

மேலும், இதில் மாவட்ட செயலாளர் ஹரிஹரன், மாநில பொருளாளர் நெடுஞ்செழியன், சி.ஐ.டி.யூ. செயற்குழு உறுப்பினர் செல்வம், வட்ட தலைவர் அருள்முருகன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூட்டுறவு சங்க தலைவரை கைது செய்யும் வரை திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளும் செயல்படாது என்று தெரிவித்தனர்.