பாஜக ஆட்சி இல்லாத மாநிலங்களில் எந்த கட்சி வலிமையோடு இருக்கிறதோ அதோடு கூட்டணி வைத்து ஒருகட்டத்தில் அந்த கட்சியை பிளவுப்படுத்தி டம்மியாக்கி வருமான வரித்துறை ரெய்டு போன்றவற்றை வைத்து மிரட்டி பாஜகவின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து அந்த மாநிலத்தில் வலிமை பெற்ற கட்சியாக பாஜகவை மாற வைப்பதுதான் பாஜகவின் ராஜ தந்திரம். இதை மத்திய அமைச்சர் அமித்ஷா சிறப்பாக செய்வார். ஆந்திரா, கர்நாடகா, பீகார் போன்ற மாநிலங்களில் இதை செய்தும் காட்டியிருக்கிறார். பாஜக எப்போது மத்தியில் ஆட்சிக்கு வந்தார்களோ அப்போது முதல் இப்போதுவரை இதைத்தான் செய்து வருகிறார்கள்.
கடந்த பல வருடங்களாகவே தமிழகத்தில் காலூன்ற பாஜக எல்லா முயற்சிகளையும் செய்து வருகிறது. இப்போது 8 சதவீத ஓட்டுகள் வரை வந்துவிட்டார்கள். இந்நிலையில்தான் 2026 சட்டமன்ற தேர்தலை குறிவைத்து அதிமுக – பாஜக கூட்டணி உருவாகியிருக்கிறது. இந்நிலையில், மனு தனிக்கள் என்பவர் கீழ்க்கண்டவாறு தன்னுடைய முகநூலில் பதிவிட்டுள்ளார்.

அண்ணாமலை மாற்றப்படுவார் என்றதும், “அவர் பவர் தெரியுமா?” என்று கிக்கி பிக்கி செய்த நண்பர்கள் அனைவருக்கும் விடை தெரிந்தாகிவிட்டது. திரு. மோடியின் கண்ணசைவுகளும், விருப்பங்களும் தான் எல்லா மாநில அரசியலிலும் இராணுவ கட்டளை போல் பாஜக பின்பற்ற வேண்டுமென்பது எழுதப்படாத விதி.
2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவின் கூட்டணியை பெரிதும் எதிர்பார்த்தனர் திரு. மோடியும், திரு. அமித்தும். ஆனால் அதற்கு பெரிதும் எதிர்ப்பாய் நின்றவர் அண்ணாமலை தான். தேர்தல் தோல்வி நேரத்திலே அண்ணாமலையை மாற்றினால் அது கட்சியை பலவீனமாக்கும் என்பதையறிந்து, 2026 சட்டமன்ற தேர்தல் வரை அண்ணாமலையை தலைவராக வைத்திருக்கவே பாஜக தலைமை விரும்பியது. ஆனால் மீண்டும் அதிமுக கூட்டணிக்கு அண்ணாமலை எதிர்ப்பு தெரிவிக்கவே, தடாலடியாக மாற்றப்பட்டுள்ளார்.
2026 தேர்தலை நாம் நினைப்பதை விடவும் வீரியமாக அணுகவிருக்கிறது பாஜக. ஒருங்கிணைந்த அதிமுக மேலுள்ள அழுத்தங்களை சற்று தளர்த்தி, இரட்டை இலை சின்ன பிரச்சனைகள் சுமூகமாக தீர்ந்ததுபோல் ஒரு பிம்பத்தை கட்டமைத்து, அஇஅதிமுகவின் ஒருமித்த முகமாக திரு. பழனிசாமியை நிறுவ பாஜக முன்னேற்பாடுகள் செய்யத் தொடங்கியுள்ளது.
கடந்த முறை NDA கைப்பற்றிய 75 தொகுதிகளை இம்முறையும் அக்கூட்டணி வென்றுவிடும் என்ற நம்பிக்கையில்தான் கூட்டணியை மிகத் தீவிரமாக்கியிருக்கிறது பாஜக.39.71 சதவீத வாக்கு வங்கியில் விஜயின் கட்சியால் பாதிப்பு உண்டா என்றால், நிச்சயம் உள்ளது. ஆனால் அது திமுக கூட்டணியின் 45 சதவீத வாக்கு வங்கியிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையே பாஜகவை சற்று தெம்பூட்டியிருக்கிறது.
அதிருப்தி ஓட்டு மற்றும் தவெக இரண்டும் பெரிதளவில் வாக்கு வங்கியில் பாதிப்பை ஏற்படுத்தினால், திமுக/கூட்டணி எளிதாக 45-50 இடங்களில் பின்னடைவை சந்திக்கும். அதாவது, திமுகவை 90 முதல் 100 தொகுதிக்குள் அடக்குவதே பாஜகவின் நோக்கமாக இருக்கும். 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் பாஜகவின் தந்திரமும் கனவும் தொங்கு சட்டமன்றமே! அதாவது தனிப் பெரும்பான்மை இல்லாத ஒரு சூழ்நிலையை உருவாக்கி, தன் அதிகார பலத்தால் அதிமுகவை முன்னிறுத்தி தமிழ்நாட்டை பாஜக ஆள வேண்டுமென்பதே அவர்களின் தற்போதைய எண்ணம். ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய பிறகு அதிமுகவை பிளந்து பாஜகவுடன் இணைத்து, தமிழ்நாட்டின் நிரந்தர அரசியல் சக்தியாக உருமாறுவதே பாஜகவின் தீவிரமான திட்டமாக இருக்கப்போகிறது’ என பதிவிட்டிருக்கிறார்.
இதுபற்றி உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். இதுபோன்ற பரபரப்பான அரசியல் கட்டுரைகளுக்கு எங்கள் பக்கத்தை ஃபாலோ செய்யுங்கள்..