திராவிட அரசியலில் சலுகையிருக்கும் ஒரு சிலருக்கு தான் சூரியன் பிராகசிக்கும்!! துணை முதல்வரை கடுமையாக சாடிய அண்ணாமலை!!

Photo of author

By Rupa

தமிழகத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நேற்று(செப்டம்பர்29) துணை முதலமைச்சராக பதவியேற்றதை அடுத்து பல்வேறு தலைவர்களும் சினிமா பிரபலங்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து வரும் நிலையில் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை அவர்கள் உதயநிதி ஸ்டாலின் அவர்களை சீண்டும் வகையில் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

திமுக கட்சியின் இளைஞர் அணி செயலாளராக இருந்து பின்னர் தேர்தலில் நின்று போட்டியிட்டு எம்எல்ஏவாக வெற்றி பெற்ற உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து கடந்த சில நாட்களாகவே உதயநிதி ஸ்டாலின் அவர்கள் துணை முதலமைச்சராக பதவியேற்கப் போகிறார் என்று பேசப்பட்டு வந்த நிலையில் இந்த வதந்தி நேற்று(செப்டம்பர் 29) உண்மையானது.

நேற்று(செப்டம்பர்29) ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் துணை முதலமைச்சராக பதவியேற்றார். இதையடுத்து திமுக கட்சியை சேர்ந்தவர்களும், கூட்டணிக் கட்சி தலைவர்களும், சினிமா பிரபலங்களும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் பாஜக கட்சி உதயநிதி ஸ்டாலின் அவர்கள் துணை முதலமைச்சராக பதவியேற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக பாஜக தனது எக்ஸ் பக்கத்தில் “கோபாலபுரத்தின் வாரிசாக இருப்பது திமுக கட்சியில் தலைமைக்கு வரவும், ஆட்சி செய்யவும் ஒரே தகுதி” என்றும் “பரம்பரை பரம்பரையாக கட்சிக்கு உழைத்த தொண்டர்களுக்கு சிறைதண்டனையும் வழக்குகளும், ஆனால் அரசியல் அனுபவமற்ற கோபாலபுர வாரிசுகளுக்கு பதவியும் அதிகாரமும்” என்றும் பதிவிட்டுள்ளது. இந்நிலையில் பாஜக கட்சியின் மாநிலத்தலைவர் அண்ணாமலை அவர்கள் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் துணை முதலமைச்சராக பதவியேற்றதை குறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பதவியேற்றது குறித்து அண்ணாமலை அவர்கள் “சலுகை இருக்கும் ஒரு சிலருக்கு மட்டுமே சூரியன் பிராகசிக்கின்றது. திமுக பதவியேற்றதில் இருந்து இன்று வரை அதாவது கடந்த 40 மாதங்களாக தமிழகத்தில் அனைவருக்கும் கிரகணம் தான் நிலவிக் கொண்டிருக்கின்றது. மக்கள் அனைவரும் தற்பொழுது விடியல் யாருக்காக வந்தது என்பதை புரிந்து கொண்டிருப்பார்கள். அவர்களுக்கான விடியல் அவர்களின் குடும்பத்தினருக்கு விடியல் அவர்களின் தலைவர்களுக்கு விடியல் மக்களுக்கு மட்டும் கிரகணம்” என்று பதிவிட்டு ஒரு கேளிக்கை சித்திரம் ஒன்றையும் அண்ணாமலை அவர்கள் பகிர்ந்துள்ளார்.