வாக்குச் சாவடி சீட்டு இல்லாதவர்களும் வாக்களிக்கலாம்! தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு!

Photo of author

By Sakthi

தமிழ்நாட்டில் ஒத்தி வைக்கப்பட்டிருந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோபர் மாதம் 6 மற்றும் 9 எண் உள்ளிட்ட தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற இருக்கின்றது.

இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது, அதோடு தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து அரசியல் கட்சிகளும் இதற்கான பிரச்சார வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி உள்ளிட்ட 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் அனைத்தும் அந்தந்த கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதற்கிடையில், உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு உட்பட தேர்தல் பணிகளில் ஈடுபட்டுவரும் அலுவலர்களுக்கு முதல் கட்டமாக பயிற்சி முகாம் நிறைவு பெற்றிருக்கிறது. வாக்குப்பதிவு தினத்தன்று பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் தொடர்பாக அவர்களுக்கு விவரிக்கப்பட்டு கையேடுகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

இந்த சூழ்நிலையில், வாக்குப்பதிவு தினத்தன்று வாக்காளரை மிக எளிமையாக அடையாளம் காண்பதற்காக வழங்கப்படும் பூத் சிலிப் இல்லை என்றால் வாக்காளரை திருப்பி அனுப்பக் கூடாது எனவும், பூத் சிலிப் இல்லை என்றாலும் வாக்காளர் அட்டையை சோதித்து பார்த்து வாக்களிக்க அனுமதி வழங்கலாம் என மாநில தேர்தல் ஆணையம் தேர்தல் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கி இருக்கிறது.

அத்துடன் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்று வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு பொதுத் தேர்தலில் அனுமதிப்பது போல 14 வகையான மாற்று ஆவணங்களில் ஒன்றை வைத்து வாக்களிப்பதற்கு அனுமதி வழங்கவும் திட்டமிடப் பட்டு இருக்கிறது என்றும், மாநில தேர்தல் ஆணையம் மிக விரைவில் இது தொடர்பான குற்ற அறிக்கையை வெளியிட இருக்கிறது என தெரிவிக்கப்படுகிறது.