காஞ்சிபுரம் அருகே பேக்கரியில் வாங்கின கேக்கை சாப்பிட்ட மூன்று குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் அவர்கள் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் அடுத்த செவிலிமேடு பகுதியில் உள்ள பிரவீன் என்ற தனியார் பேக்கரி உள்ளது. தாயார் அம்மன் குளம் பகுதியை சேர்ந்த சுரேந்திரன், விமல் ராஜ் ஆகியோர் தங்கள் குழந்தைகளுக்காக அந்த பேக்கரியில் கேக் வாங்கினர். இருவரும் தங்கள் குழந்தைகளுக்கு கேக்கை கொடுத்துள்ளனர்.
கேக்கை சாப்பிட்ட குழந்தைகள் மூவருக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து மூன்று குழந்தைகளையும் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். பேக்கரியின் உரிமையாளர் கடையை பூட்டி விட்டு தலைமறைவாகி விட்டார். பிரச்னை ஏதும் ஏற்படாமல் இருக்கு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இதே போல் கடந்த சில நாட்களுக்கு முன்பு காஞ்சிபுரம் நகரப் பகுதியில் உள்ள தனியார் உணவகத்தில் அசைவ உணவு சாப்பிட்ட 31 பேர் உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதில் 28 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
கொரோனா பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கிற்கு முன்பாக வாங்கிய உணவுப் பொருட்களை தற்போது விற்பனை செய்கின்றனர் என்றும், அதுவே மக்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட காரணம் என்றும் பெரும்பாலோர் கூறி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக குழு அமைத்து உணவு சார்ந்த பொருட்கள் விநியோகம் செய்யும் நிறுவனங்கள் இடையே ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.