வீட்டிலயும் மாஸ்க் போடுங்க! வீட்டுக்கு யாரையும் கூப்பிடாதீங்க! மத்திய அரசு அறிவுரை!

0
144
vk paul
vk paul

வீட்டிலயும் மாஸ்க் போடுங்க! வீட்டுக்கு யாரையும் கூப்பிடாதீங்க! மத்திய அரசு அறிவுரை!

நாட்டில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வருவதால், அதனை தடுக்க மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. இருந்தாலும், பொதுமக்களிடையே கொரோனா தொற்று காட்டுத் தீ போன்று பரவி வருகிறது.

இந்தியாவில் ஒருநாள் பாதிப்பு 3 லட்சத்திற்கும் மேல் பதிவாகி வரும் சூழலில், தொற்று பரவல் செயினை உடைப்பதற்கு என்ன வழி என்று அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர். பாதுகாப்பு இடைவெளியை பின்பற்ற வேண்டும், மாஸ்க் பயன்படுத்த வேண்டும், சானிடைசரை அடிக்கடி கைகளில் தடவிக்கொள்ள வேண்டும் என பல்வேறு அறிவுரைகள் கூறப்பட்டாலும், கொரோனா பரவல் செயினை உடைக்க முடியவில்லை.

இந்நிலையில், வீட்டில் இருப்பவர்களும் மாஸ்க் அணிய வேண்டும் என மத்திய அரசு அறிவுரை கூறியுள்ளது. நேற்று நிதி ஆயோக் உறுப்பினர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய போது, டாக்டர் வி.கே.பால் இந்த அறிவுரையை நாட்டு மக்களுக்கு கூறியுள்ளார்.

அதாவது, பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே செல்ல வேண்டாம் என கேட்டுக் கொண்ட அவர், வெளியே செல்லும் போது கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என வலியுறுத்தினார். வெளியே சென்றாலும், பாதுகாப்பு இடைவெளியை பின்பற்றி, சானிடைசரை அடிக்கடி பயன்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

தற்போது வீட்டில் இருக்கும் போது கூட மாஸ்க் அணியும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த வி.கே.பால், தேவையில்லாமல் வெளி நபர்களை வீட்டுக்குள் அனுமதிக்க வேண்டாம் என்றும், நண்பர்கள், உறவினர்களை வீட்டுக்கு அழைக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

வீட்டில் மட்டும் தான் மாஸ்க் போட வேண்டியதில்லை என்று பொதுமக்கள் நிம்மதியாய் இருந்து வரும் சூழலில், வீட்டிலும் மாஸ்க் போட வேண்டிய நேரம் வந்துவிட்டதாக நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே.பால் கூறியிருப்பது மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Previous articleசனிக்கிழமையும் இறைச்சி விற்கத் தடை! தமிழக அரசு அதிரடி உத்தரவு!
Next articleமாநில அரசை எச்சரித்த கமல்ஹாசன்!