கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக திருப்பதி பெருமாள் கோவில் அர்ச்சகர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
உலகப் புகழ்பெற்ற திருப்பதி பெருமாள் கோவிலானது கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக 82 நாட்கள் வரை பக்தர்களுக்கு தரிசனம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த ஜூன் 11ஆம் தேதி முதல் சுவாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து, திருப்பதி கோயில் ஜீயர் உட்பட 20 அர்ச்சகர்கள் மற்றும் 200க்கும் மேற்பட்ட தேவஸ்தான ஊழியர்கள் கொரோனா தொற்றால் பாதிப்படைந்தனர். இதனால், தற்போது இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டு, ரூ.300 சிறப்பு ஆன்லைன் தரிசன முறை மட்டுமே அமலில் உள்ளது.
இந்நிலையில், திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் பணியாற்றி வந்த அர்ச்சகர் ஸ்ரீநிவாசாச்சர்யலு (வயது 45) என்பவரை தற்காலிகமாக ஏழுமலையான் கோவிலுக்கு பணிமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு இந்த வாரத் துவக்கத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டபோது வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவ அறிவியல் மையத்தில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்நிலையில் அவருக்கு நேற்று மூச்சுத்திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.