திருவண்ணாமலை கோவில் கிரிவலம்! செல்ல உகந்த நேரம் இதுதான் கோவில் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு!
திருவண்ணாமலை மாவட்டத்தில் புகழ்பெற்ற அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் உள்ளது. பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான நெருப்பின் அம்சமாக சிவபெருமான் இங்கு வீற்றிருக்கிறார். இந்த கோவிலில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று பக்தர்கள் கிரிவலம் வருவது வழக்கம். அதனால் பௌர்ணமி அன்று கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
இந்த மலையின் சுற்றளவு 14 கிலோமீட்டர் உள்ளது. இம்மலையில் இன்றும் பல சித்தர்கள் வாழ்ந்து வருவதாக வரலாறு. மலையை வலம் வரும்போது மனிதர்கள் இடப்பக்கம் நடக்க வேண்டும், ஏனென்றால் மலையை ஒட்டியுள்ள வலப்பக்கம் சித்தர்களும், யோகிகளும், தேவர்களும் வலம் வருவதாக ஐதீகம். இதனால் இங்கு ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
மலையையே சிவனாக திருவண்ணாமலையில் வழிபாடு செய்வதால் கோவில் பின்புறம் உள்ள பக்தர்களால் அண்ணாமலை என அழைக்கப்படும் மலையை சுற்றி லட்சக்கணக்கான பக்தர்கள் பௌர்ணமி நாளில் கிரிவலம் செல்கின்றனர்.
கிரிவலம் செல்வதற்கான உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் ஒவ்வொரு மாதமும் அறிவிப்பது வழக்கம். இந்த மாதம் பௌர்ணமி நாளை சனிக்கிழமை இரவு 10:41 க்கு தொடங்கி மறுநாள் ஐந்தாம் தேதி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12 :48 மணிக்கு நிறைவடைகிறது இந்த நேரம் கிரிவலம் செல்ல உகந்த நேரம் ஆகும். எனவே பக்தர்கள் இந்த நேரத்தில் கிரிவலம் செல்லலாம் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.