தமிழகத்தில் எச்சரிக்கை மணி அடிக்கும் கொரோனா பாதித்த முதியவர்கள் இறப்பு விகிதம்
கடந்த மார்ச் இறுதி வாரத்தில் இந்தியா முழுவதும் பரவ துவங்கிய கொரோனா நோய்த் தொற்று தற்போது நாடு முழுவதும் உச்ச நிலையை எட்டியுள்ளது.
தமிழகத்தை பொருத்து வரை தற்போதைய நிலவரப்படி 23,495 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 2351 ஆகும். கொரோனா பாதித்தவர்களில் கிட்டதட்ட 10% பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாக உள்ள நிலையில், இதில் சுமார் 105 பேர் இறந்துள்ளனர். இதை மற்ற வயதினருடன் ஒப்பிட்டால் 21 முதல் 40 வரை உள்ளவர்கள் 15 பேரும், 41 முதல் 60 வயது வரை உள்ளவர்கள் 77 பேரும் இறந்துள்ளனர்.
அதாவது 60 வயதை கடந்தவர்களில் சுமார் 100 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் 5 பேர் வரை உயிரிழக்க நேரிடுகிறது.
இந்த இறப்பு விகிதம் மற்ற வயதினருடன் ஒப்பிடுகையில் அதிக சதவீதமாக இருப்பதால், இந்த வயது வரம்புக்குள் உள்ளவர்கள் மிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
பெரும்பாலும் 60 வயதை கடந்தவர்கள் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் உள்ளிட்ட உடல் உபாதைகள் உள்ளவர்களால் இருப்பதால் கொரோனா நோய் தொற்று அவர்களை அதிக அளவில் பாதிப்பதாக மருத்துவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
எனவே நீங்களோ உங்கள் வீட்டிலிருப்பவர்கள் 60 வயதை கடந்தவர்களாக இருந்தால் அதிக அக்கறையுடன் பார்த்து கொள்ளுங்கள். அரசு அறிவித்துள்ள கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு பாதுகாப்பாக இருங்கள்.