தமிழகத்தில் 17 ஆயிரத்தை நெருங்கியது கொரோனா பாதிப்பு! உயிரிழப்பு 100ஐ எட்டியது!
நாட்டில் கொரோனா இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வரும் சூழலில் தமிழகத்திலும் தொற்று பரவல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நேற்று 1,25,004 பேருக்கு ஆர்டிபிசிஆர் டெஸ்ட் எடுக்கப்பட்டுள்ளது. இதில், 16,665 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதில் அதிக அளவாக சென்னையில் 4,764 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 1,219 பேரும், கோவையில் 963 பேரும், நெல்லையில் 714 பேரும் அதிக அளவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று 15,114 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதே நேரத்தில், மொத்தம் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 1,10,308 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவைத் தவிர வேறு எந்த நோயும் பாதிக்காத 33 வயது ஆணும், 34 வயது பெண்ணும் உட்பட, இணை நோய்கள் இல்லாத 14 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். மொத்தமாக நேற்று 98 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் நேற்று வரை 11,30,167 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 13,826 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.