முன்னணியில் தி.மு.க !!! அ.தி.மு.க பின்னடைவு ???

Photo of author

By Parthipan K

தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்கள் தவிர்த்து 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் நடந்தது. மொத்தம் 515 மாவட்ட கவுன்சிலர்கள், 5090 ஒன்றிய கவுன்சிலர், 9624 கிராம ஊராட்சி தலைவர்கள், 76,746 ஊராட்சி கவுன்சிலர்கள் ஆகிய பதவிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடந்தது.  இதில் பதிவான ஓட்டுகளை என்னும் பணி நேற்று துவங்கியது.

இந்நிலையில் நேற்று இரவு தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள முடிவுகளின்படி ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கான இடங்களில், அதிமுக 308 இடங்களிலும், திமுக 378 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தன.

இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் ஓட்டு எண்ணிக்கை குறித்து மாநில தேர்தல் கமிஷனர் பழனிசாமி சென்னையில் நேற்று இரவு பேட்டி அளித்தார்.

 அப்போது அவர் கூறியதாவது “ ஓட்டு எண்ணிக்கை முறையாக நடந்து வருகிறது. இதில் எந்த இடத்திலும் முறைகேடு நடைபெறவில்லை. ஓட்டு எண்ணும் ஊழியர்களை, சுழற்சி முறையில் பயன்படுத்துவது குறித்து தேர்தல் அலுவலர் முடிவு செய்வார். வெற்றி பெற்றவர்களுக்கு உடனடியாக சான்றிதழ்களை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தி.மு.க., முன்னிலையான இடங்களில் முடிவுகள் அறிவிக்கப்படவில்லை என அக்கட்சி அளித்துள்ள புகாரில் உண்மை இல்லை. கட்சி பாகுபாடின்றி வெளிப்படையாக செயல்படுகிறோம். புகார்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கையும் எடுத்து வருகிறோம்.

மாவட்ட கவுன்சிலர் பதவி இடங்கள் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் பதவி இடங்களுக்கு பதிவான ஓட்டுகள் அனைத்தும் ஒவ்வொன்றாக எடுத்து யாருக்கு வாக்களித்திருக்கிறார்கள்? என்பதை கட்சி முகவர்களிடம் காண்பித்த பின்னரே அவை கட்சி வாரியாக பிரிக்கப்பட்டது. இதனால் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்களுக்கான முழுமையான முடிவுகளை வெளியிடுவதற்கு அதிக நேரமாகிறது” என்று தெரிவித்தார்