டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுக்கு இரண்டு கோடி ரூபாய் பரிசு அறிவித்தார் தமிழக முதலமைச்சர்.
டோக்யோ பாராலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவின் மாரியப்பன் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். நேற்று நடைபெற்ற T63 உயரம் தாண்டுதல் போட்டியில் அமெரிக்க வீரர் சாம் கிரீவுக்கும் மாரியப்பனுக்கும் இடையே கடும் போட்டி காணப்பட்டது. இதில் சாம் கிரீவ், 1.88 மீட்டர் உயரம் தாண்டி தங்கம் வென்றார். 1.86 மீட்டர் உயரம் தாண்டிய மாரியப்பன் வெள்ளிப்பதக்கம் வென்றார். இந்த நிலையில், மாரியப்பனின் சாதனையால் தேசம் பெருமை கொள்கிறது என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் ட்விட்டர் பக்கம் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர். இதேபோல் அவருக்கு சமூக ஊடகங்கள் வாயிலாக பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
மாரியப்பன் வெள்ளி பதக்கம் வென்றதை தொலைக்காட்சியில் பார்த்த அவரது கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். அந்த கிராமமே பட்டாசு வெடித்தும் கேக் வெட்டியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
டோக்யோ பாராலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கத்தை வென்றதன் மூலம் பாராலிம்பிக் போட்டியில் இரண்டாவது முறையாக தமது திறமையை நிரூபித்துள்ளார் மாரியப்பன்.
இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பாராலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு இரண்டு கோடி ரூபாய் பரிசு அறிவித்துள்ளார்.
இந்தப்போட்டியில் மற்றொரு இந்திய வீரரான சரத் குமார் தமது முதல் முயற்சியில் 1.83 மீட்டர் உயரம் தாண்டிய நிலையில், மூன்று முறை தோல்விக்குப் பிறகு 1.86 மீட்டர் உயரத்தை தாண்டி வெண்கலப் பதக்கத்தை வென்றார். பாராலிம்பிக் போட்டிகளில் இரண்டு பதக்கங்களை பெறும் தமிழகத்தின் முதல் வீரர் மாரியப்பன் என்பது குறிப்பிடத்தக்கது.