கொரோனா வைரஸ் பாதிப்பால் நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் தள்ளி வைக்கப்பட்ட 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வருகின்ற ஜூன் 1 முதல் 12-ம் தேதி வரை நடைபெற உள்ளன. இதைப்போலவே 11 ஆம் வகுப்புக்கான தள்ளி வைக்கப்பட்ட தேர்வு வரும் ஜூன் 2 ஆம் தேதியில் நடத்தப்படும் என்றும், மேலும் இதைப்போலவே 12 ஆம் வகுப்பு தேர்வை எழுத முடியாமல் போன மாணவர்களுக்கு ஜூன் 4 ஆம் தேதி தேர்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக பள்ளிகல்வித்துறை அறிவித்துள்ள இந்த முடிவினால் தமிழக அரசை பல்வேறு தரப்பினரும் கடுமையாக விமர்சனம் செய்தனர். ஆனால் தேர்வெழுத போகும் மாணவர்களுக்கு தேவையான பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த தேர்வுகள் நடத்தப்படும் என தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.
இந்நிலையில் சொந்த ஊரை விட்டு வெளியூரில் தங்கியுள்ள மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு வந்து 10 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுத அவர்களுக்கு இ-பாஸ் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார்.
மேலும் இந்த தேர்வுக்காக வெளி மாவட்டம் மற்றும் தனியார் பள்ளி விடுதிகளில் தங்கிப் படித்து வரும் மாணவர்களை 3 நாட்களுக்கு முன்பே அழைத்து வருவதற்கும் ஏற்பாடு செய்யப்படும், மேலும் மாணவர்களுக்கு உணவு வசதியும் செய்து தரப்படும், இதற்காக பள்ளிக் கல்வித்துறையில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களும் தேர்வுப் பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அமைச்சர் அறிவித்துள்ள போல இ-பாஸ் பெற விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு சார்பாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாணவர்களின் பெற்றோர்கள் இ-பாஸ் பெறுவதற்கான இணையதள லிங்கையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
https://tnepass.tnega.org/#/user/pass என்ற இணையதள லிங்கை பயன்படுத்தி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் இ-பாஸ் பெறலாம் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.