கொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் எழுத சிறப்பு மையங்கள் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் ஜூன் 1 ஆம் தேதி நடைபெறுவதாக அறிவித்திருந்த 10 ஆம் வகுப்பு தேர்வு ஜூன் 15 ஆம் தேதி முதல் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆனால் கொரோனா பாதிப்பினால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த தேர்வை வரும் ஜூலை மாதம் வரை ஒத்தி வைக்க வேண்டும் என்று பொது நல வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து, இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் தேர்வெழுத போகும் மாணவர்களுக்கு அரசின் சார்பாக என்ன மாதிரியான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.
நீதிமன்றத்திற்கு பதில் அளித்து தமிழக அரசு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, மாநிலத்தில் கொரோனா கட்டுப்பாட்டு மையங்களில் வசிக்கும் மாணவர்கள் தேர்வு எழுத அதற்காக சிறப்பு தேர்வு மையங்கள் அமைக்கப்படும்.
மேலும் நோய் கட்டுப்பாட்டு பகுதியில் வசிக்கும் அவர்கள் வெளியே சென்று வர ஹால் டிக்கெட் அடிப்படையில் அவர்களுக்கு அனுமதி வழங்கப்படும். வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து தேர்வு எழுத வரும் மாணவர்கள் இந்த சிறப்பு தேர்வு மையத்தில் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.
இது மட்டுமில்லாமல் தேர்வெழுதும் மாணவர்கள் மற்றும் தேர்வு மையத்தில் பணி புரியும் ஆசிரியர்களுக்கு 46.37 லட்சம் முகக்கவசங்கள் வழங்கப்படும். சிறப்பு தேர்வு மையங்களுக்கு சென்று வர மாணவர்கள் , ஆசிரியர்களுக்கு போதிய பேருந்து வசதி செய்து தரப்படும்.
மேலும் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் மாணவர்களின் வீடுகளுக்கே சென்று ஹால் டிக்கெட் வழங்கப்படும். இ பாஸ் இல்லாமலே தேர்வு நாளன்று தேர்வு மையங்களுக்கு சென்று வர மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்படும்.
இது மட்டுமில்லாமல் முன் எச்சரிக்கையாக ஒரு தேர்வு அறையில் 10 மாணவர்கள்மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர் என்றும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.