நிபந்தனைகளுக்குட்பட்டு தமிழ்நாட்டில் மதுபானக் கடைகள் திறப்பு – தேதியை அறிவித்த தமிழக அரசு

0
138

நிபந்தனைகளுக்குட்பட்டு தமிழ்நாட்டில் மதுபானக் கடைகள் திறப்பு – தேதியை அறிவித்த தமிழக அரசு

கொரோனா பரவுவதைத் தடுக்கும் பொருட்டு, கடந்த மார்ச் 21ம் தேதி ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. முதற்கட்ட ஊரடங்கு ஏப்ரல் 14ம் தேதி முடிவுக்கு வந்த நிலையில் இரண்டாம் கட்டமாக மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இதனால் அத்தியாவசிய பொருட்களை விற்கும் மளிகைக் கடைகள், காய்கறி கடைகள், மருந்தகங்கள், அடுமனைகள், உணவகங்கள் மட்டுமே குறிப்பிட்ட நேரத்திற்குச் செயல்பட அனுமதிக்கப்பட்டனர்.

ஒரு சிலர் மொத்தமாக மது பாட்டில்களை வாங்கி இருப்பு வைத்துக் கொண்டாலும் மதுக் கடைகள் மூடப்பட்டதால் குடிமகன்கள் திண்டாடிப் போனார்கள். இதனால் மே 3ம் தேதிக்காகக் காத்திருந்தனர். கொரொனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கை மே 17ம் தேதி வரை நீட்டிப்பதாக மத்திய அரசு அறிவித்தது. கொரோனா பாதிப்பை ஆராய்ந்து அதற்கு ஏற்றார் போல் ஊரடங்கைத் தளர்த்திக் கொள்ள மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது.

இதனையடுத்து கர்நாடகா, ஆந்திரா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் இன்று முதல் மதுக்கடைகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அதிகாலை முதலே மதுக்கடைகளில் நீண்ட வரிசையில் நின்று கொண்டிருந்தனர் குடிமகன்கள். மற்ற மாநிலங்களில் மதுக்கடைகள் திறந்து விடத் தமிழகத்தில் எப்போது மது கடைகள் திறக்கப்படும் என ஏக்கத்துடன் காத்திருக்கும் ‘குடி’மக்களுக்கு ஓர் நற்செய்தி. வரும் 7ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் இயங்கும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கை கீழ் வருமாறு:

கொரோனா வைரஸ் தொற்று நோயை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பிறப்பித்திருந்த ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகளை அவ்வப்போது வழங்கி வருகிறது. மத்திய அரசின் ஊரடங்கு உத்தரவு 4.5.2020 முதல் மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் மதுபானக்கடைகள், சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு திறக்க அனுமதி அளித்துள்ளது. எனினும் மதுபானக்கூடங்கள் திறப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில் தமிழ்நாட்டை ஒட்டியுள்ள கர்நாடகா, ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களில் மதுபானக்கடைகளை திறக்க ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டை ஒட்டியுள்ள ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் உள்ள மதுக்கடைகளுக்கு தமிழக எல்லைப்பகுதியில் உள்ள மக்கள் அதிக அளவில் செல்வதால், மாநிலங்களுக்கு இடையேயான மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது. இவற்றை கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டிலும் மதுபானக்கடைகளை வரும் 7.5.2020 முதல் திறக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. எனினும் நோய்கட்டுப்பாட்டு பகுதிகளிலுள்ள மதுபானக்கடைகள் திறக்கப்படமாட்டாது. நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு

வெளியே உள்ள மதுபானக்கடைகள் மட்டும் கீழ்க்கண்ட நிபந்தனைகளுக்குட்பட்டு திறக்க அனுமதிக்கப்படுகிறது.

  1. மதுபானக்கடைகளில் கூட்டம் கூடுவது தவிர்க்கப்படவேண்டும்.
  2. ஒரு நபருக்கும் இன்னொரு நபருக்கும் உள்ள இடைவெளி ஆறு அடி தூரமாக பராமரிக்கப்படவேண்டும்.
  3. மதுபானக்கடைகளில் ஒரே நேரத்தில் ஐந்து நபர்களுக்கு மேல் கூடுவதற்கு அனுமதிக்கக்கூடாது.
  4. மதுபானக்கடைகள் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மட்டுமே திறக்க அனுமதிக்கப்படுகிறது.
  5. அனைத்து மதுபானக்கடைகளிலும் தேவைக்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும்.
  6. ஒவ்வொரு மதுபானக்கடைகளிலும் தேவைகேற்ப கூடுதல் நபர்களை பணியமர்த்தி கூட்டம் சேர்வதை தவிர்க்க வேண்டும்.

மேற்கண்ட நிபந்தனைகளுக்குட்பட்டு தமிழ்நாட்டில் மதுபானக் கடைகள் இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது. எனினும், மதுபானக்கூடங்கள் திறப்பதற்கு அனுமதி இல்லை.

Previous articleபாப்கார்ன் விலை பற்றிப் பேச யாருக்கும் உரிமையில்லை – திருப்பூர் சுப்பிரமணியம் அடாவடி
Next articleகொரோனா பரவல் எதிரொலி – தற்காலிகமாக மூடப்படும் கோயம்பேடு சந்தை