பதவியேற்றவுடன் தனது அதிரடி காட்டிய தமிழக அரசு! இரவோடு இரவாக செய்யப்பட்ட மூன்று முக்கிய மாற்றங்கள்!

0
68

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழகம் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது அதைத் தொடர்ந்து நேற்றைய தினம் சென்னை கிண்டியில் இருக்கின்ற ஆளுநர் மாளிகையில் புதிய அரசு பதவி ஏற்பு விழா நடந்தது. எளிமையான முறையில் நடைபெற்ற இந்த விழாவில் தமிழகத்தின் முதலமைச்சராக முதல் முறையாக ஸ்டாலின் பதவி ஏற்றுக் கொண்டார். முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் அவருடன் இணைந்து 34 அமைச்சர்கள் நேற்று பதவியேற்றுக் கொண்டார்கள்.

தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு 4 அதிகாரிகள் தனி செயலாளர்களாக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உதய சந்திரன் உமாநாத் எம்.எஸ் சண்முகம் மற்றும் அனு ஜார்ஜ் உள்ளிட்டோர் தனிச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

இந்த சூழ்நிலையில், தமிழகத்தில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதற்கான உத்தரவை கூடுதல் தலைமைச் செயலாளர் பிரபாகரன் நேற்று இரவு பிறப்பித்திருக்கிறார். இதன்படி சென்னை மாநகர காவல்துறை ஆணையராக இருந்த மகேஷ்குமார் அகர்வால் இடமாற்றம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக சங்கர் ஜிவால் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்.

அதேபோல உளவுத்துறை ஏடிஜிபி ஆக கோவை மாநகர காவல்துறை ஆணையராக இருக்கின்ற டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். இவர் முன்னரே மதுரை மாவட்ட காவல்துறை ஆணையராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்த ஜெயந்த் முரளி மாற்றப்பட்டு அதற்கு பதிலாக தாமரைக்கண்ணன் நியமனம் செய்யப்படுகிறார்.