மே 31ம் தேதி வரை நான்காம் கட்ட ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு தொடர்ந்து தளவுகளை அறிவித்து வருகிறது.
பேருந்து போக்குவரத்து மே 17ம் தேதியிலிருந்து தொடங்கப்படலாம் என எதிர்பார்த்திருந்த நிலையில் இது குறித்து இன்னும் அரசு முடிவெடுக்கவில்லை.
இதனிடையில் பெரும்பாலும் தின வாடகைக்கு ஆட்டோ ஓட்டும் ஆட்டோ ஓட்டுநர்கள் ஊரடங்கினால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி, ஆட்டோக்களை அனுமதிக்க அரசுக்கு கோரிக்கை வைத்தனர். ஒரு கட்டத்தில் போராட்டமும் நடத்தினர்.
இந்நிலையில் கொரோனா பரவல் அதிகம் இருக்கும் சென்னையை தவிர்த்து மற்ற நகரங்களில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை ஆட்டோக்களை இயக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
ஆட்டோக்கள் இயக்க அரசு விதித்துள்ள நிபந்தனைகள்:
- காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை ஆட்டோக்கள் இயக்கப்பட வேண்டும்.
- ஆட்டோ ஓட்டுநருடன், பயணி ஒருவர் மட்டுமே பயணிக்க வேண்டும்.
- இருவரும் பயணம் முழுவதும் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும்.
- தினமும் 3 முறை கிருமி நாசினி தெளித்து தூய்மைப்படுத்த வேண்டும்.
- நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் ஆட்டோக்களை இயக்க அனுமதியில்லை.