தகுதியுடையவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்… தமிழக அரசு வேண்டுகோள்!

Photo of author

By Parthipan K

தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ளது. தினசரி பாதிப்பு எண்ணிக்கையும் தின்ந்தோறும் அதிகரித்து வருகிறது. அதனை தடுக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மருத்துவ வல்லுனர் குழுவுடன் கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்திற்கு பின்னர் சில உத்தரவுகளும் அறிவுரைகளும் வழங்கப்பட்டன.

மேலும் இதுக்குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும், கொரோனா தொற்றின் விகிதத்தை குறைக்க வேண்டும்,  ஆர்.டி.-பி.சி.ஆர். சோதனைகளை நாளொன்றுக்கு 90 ஆயிரத்துக்கு குறையாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பரிசோதனை முடிவுகளை 24 மணி நேரத்திற்குள் தெரியப்படுத்த வேண்டும்,  தமிழகம் முழுவதும் காய்ச்சல் முகாம்கள் அமைத்து சளி, மற்றும் காய்ச்சல் உள்ளவர்களை விரைவாக கண்டறிந்து சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகள் பிறபிக்கப்பட்டுள்ளது.

தமிழக பொது சுகாதார சட்டம், 1939-ன்படி இந்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை மீறுபவர்களுக்கு சுகாதாரம், உள்ளாட்சி, காவல், வருவாய்த்துறை அலுவலர்கள் மூலமாக அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்றும் 10-4-2021 வரை 16 லட்சத்து 37 ஆயிரத்து 245 விதிமீறல்கள் கண்டறியப்பட்டு தமிழ்நாடு பொதுசுகாதார சட்டம், 1939-ன் கீழ் ரூ.17 கோடியே 92 லட்சத்து 56 ஆயிரத்து 700 அபராதமாக விதிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகுதியுடையவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும் தமிழக அரசின் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி ”அந்தந்த தொழிற்சாலைகள், அரசு அலுவலகங்கள், பணியிடங்கள், சந்தைகள், அடுக்குமாடி குடியிருப்புகள் போன்ற இடங்களில், சம்பந்தப்பட்ட அமைப்புகள், பெருநகர சென்னை மாநகராட்சி/ மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொண்டு கோவிட் தடுப்பூசி போட ஏற்பாடு செய்ய வேண்டும்.

எனவே, அரசு எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெற, கொரோனா தொற்று நீங்கிட, அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள, ஒத்துழைப்பு நல்க வேண்டும். அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டும். வீட்டை விட்டு வெளியே வரும் அனைவரும் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும்”  இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.