தமிழக சட்டசபையில் நேற்றைய தினம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மானிய கோரிக்கை மீது விவாதம் நடந்தது. இந்த விவாதத்திற்கு பதிலளித்து பேசிய மாநில மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சில விஷயங்களை வெளிப்படையாக கூறியிருக்கிறார்.
அதைப் பற்றிப் பார்ப்பதற்கு முன்னால் செந்தில் பாலாஜி தொடர்பாக பார்த்துவிடலாம். செந்தில் பாலாஜி கடந்த 2011 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி அமைத்த சமயத்தில் அப்போது போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார்.
அதன்பிறகு ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக, அந்த கட்சியில் இருந்து விலகி தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார். கரூர் மாவட்டத்தில் மிகப்பெரிய செல்வாக்குடன் இருந்த அவரை இதுதான் சமயம் என்று சரியாக பயன்படுத்திக் கொண்டார் தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின்.
சமீபத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் திமுக சார்பாக கரூரில் போட்டியிட்டு வெற்றி பெற்று விட்டார் செந்தில் பாலாஜி, அவர் வெற்றி பெற்றவுடன் உடனடியாக அவருக்கு தன்னுடைய அமைச்சரவையில் இடம் அளித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.
கரூர் மாவட்டத்தில் தனி செல்வாக்குடன் இருக்கும் செந்தில் பாலாஜியை வைத்து அதிமுகவிற்கு மிகப்பெரிய குடைச்சலை கொடுப்பதற்கு ஸ்டாலின் திட்டமிட்டுத்தான் அவருக்கு முக்கியத்துவம் கொடுத்து இருந்தார் என்று சொல்லப்படுகிறது. அதே போலவே திமுக ஆட்சி அமைத்ததில் இருந்து செந்தில் பாலாஜி அவர்களை வைத்து பல வகைகளில் அதிமுகவிற்கு குடைச்சலை கொடுத்து வருகின்றார் ஸ்டாலின்.
அந்த விதத்தில் தான் அமைச்சராக இருக்கக் கூடிய மின்துறையில் அதிமுக ஆட்சி காலத்தில் என்னென்ன தவறுகள் நடைபெற்றது என்பது குறித்து தீவிர ஆய்வில் ஈடுபட்டு வருகின்றார் தற்போதைய மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி.
அதன்படி தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 71857 டன் நிலக்கரியை காணவில்லை என்று தெரிவித்ததோடு, அங்கே பதிவேட்டில் இருக்கிறது ஆனால் இருப்பில் இல்லை எங்கே தவறு நடந்தது? இந்த தவறு எத்தனை வருட காலமாக நடைபெற்று வருகிறது? என்பது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது இது குறித்த ஆய்வு அறிக்கை வந்தவுடன் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதற்கு முன்னரே வட சென்னை அனல்மின் நிலையத்தில் 2 லட்சத்து 38 ஆயிரத்து 485 டன் நிலக்கரி காணாமல் போய்விட்டது என்பதை கண்டறிந்து இருக்கிறோம் என கூறியிருக்கிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி.
பதிவேட்டில் இருக்கிறது இருப்பில் இல்லை நாங்கள் புகார் தெரிவித்த அன்றைய தினம் மாலையே நிருபர்களை சந்தித்த முன்னாள் மின்துறை அமைச்சர் தங்கமணி இதுகுறித்து 25 அதிகாரிகள் அடங்கிய குழுவை அமைத்து விசாரிக்க விட்டதாக தெரிவித்தார். இந்த குழு அமைக்கப்பட்டது அப்படி ஒரு குழு அமைக்கப்படும் அதன் விசாரணை அறிக்கை எங்கே சென்றது என்று தெரியவில்லை. இந்த சூழ்நிலையில்தான் தற்சமயம் தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது என கூறியிருக்கிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி.
சென்ற ஆட்சிக் காலத்தில் தனியாரிடம் இருந்து கூடுதல் விலைக்கு மின் கொள்முதல் செய்ததால் தான் மின் வாரியத்திற்கு இழப்பு உண்டாகிறது. மின்துறை என்பது சேவைத்துறை தான் அதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது. சேவை என்பதற்காக இவ்வளவு அதிகமான விலையில் கொள்முதல் செய்வதா? எதிர்வரும் காலங்களில் மின்துறையில் தேவையில்லாத செலவீனங்களை குறைக்க மிக தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று செந்தில்பாலாஜி தெரிவித்திருக்கிறார்.