ரசிகர்களால் தளபதி என என அழைக்கப்படுபவர் நடிகர் விஜய். இப்போது தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக மாறிவிட்டார். அதாவது, வெள்ளை சட்டை அணிந்து அரசியல்வாதியாக மாறிவிட்டார். இப்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் முடிந்ததும் முழுநேர அரசியலில் அவர் ஈடுபடவிருக்கிறார்.
ஜனநாயகன் படத்தை முடித்தபின்னர் தமிழகமெங்கும் சென்று அவர் மக்களை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பூத் கமிட்டி, மாவட்ட செயலாளர்கள் அமைப்பது என கட்சி வேலைகளிலும் அவர் மும்முரமாக ஈடுபடவிருக்கிறார். சமீபத்தில்தான் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
அந்த கூட்டத்தில் பேசிய விஜய் வழக்கம்போல் திமுகவை விமர்சித்து பேசினார். விஜயின் அரசியல் வருகை அதிமுக, திமுக, பாஜக, நாதக போன்ற எல்லா கட்சிகளின் வாக்கு வங்கியை பாதிக்கும் என்றே அரசியல் விமர்சகர்கள் சொல்கிறார்கள். எனவே, எல்லோருமே விஜயை விமர்சிக்கவும், திட்டவும் துவங்கிவிட்டனர்.
பொதுக்குழுவில் பேசிய ஆதவ் அர்ஜுனா ‘தலைவர் வருஷத்துக்கு 1000 கோடி வருமானத்தை விட்டுவிட்டு வந்திருக்கிறார்’ என பேசினார். இதை கையில் எடுத்த திமுகவினர் விஜயின் வருமானத்தை வருமான வரித்துறையோடு ஒப்பிட்டு பேச துவங்கிவிட்டனர். இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அய்யாவு ‘ விஜய் 1000 கோடி வருவாயை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்திருப்பதாக தவெக கட்சி நிர்வாகிகள் பேசுகிறார்கள். அப்படியெனில் 300 கோடியை அவர் வரியாக கட்டியிருக்க வேண்டும். ஆனால், விஜய் கடந்த வருடம் 80 கோடி மட்டுமே வரி கட்டியிருக்கிறார். மீதமுள்ள 220 கோடியை வருமான வரித்துறை வசூல் செய்யுமா?. அப்படி இல்லையெனில் பாஜக சொல்லித்தான் விஜய் கட்சியை துவங்கியுள்ளார் என்பது உண்மையாகிவிடும்’ என பேசியிருக்கிறார்.