மின்சார கட்டணம் – விளக்கமளித்த மின்சார வாரியம்

Photo of author

By Parthipan K

ஊரடங்கு காரணமாக மின்சார கட்டணம் வசூலிக்கப்படாத நிலையில் இந்த மாதம் ஜுன் 6ம் தேதி வரை மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாத மின்சார கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நடிகர் பிரசன்னா தனது டிவிட்டர் பக்கத்தில் “இந்த கோவிட் ஊரடங்கின் மத்தியில் தமிழ்நாடு மின்சார வாரியம் கொள்ளையில் ஈடுபடுகிறது என்று உங்களில் எத்தனை பேர் உணர்கிறீர்கள்” என பதிவிட்டிருந்தார். இதற்க்கு பலரும் தாங்களும் இவ்வாறு உணர்கிறோம் என கூற, ஒரு கட்டத்தில் #TNEBstoplooting உள்ளிட ஹேஷ்டேக்கள் டிவிட்டரில் வைரலானது.

இந்நிலையில் தற்போது இதற்க்கு மின்சார வாரியம் விளக்கமளித்துள்ளது. அதில் “தமிழ்நாட்டில் வீட்டு உபயோகத்தை உள்ளடக்கிய தாழ்வழுத்த மின் நுகர்வோருக்கு இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கணக்கெடுக்கப்பட்டு மின் கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது நிலவிவரும் கரோனா வைரஸ் பாதிப்பினால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், மின் நுகர்வோர் மற்றும் ஊழியரின் பாதுகாப்பு காரணம் கருதி, மின் கணக்கெடுப்பு எடுக்க முடியாத நிலையில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் மின் கணக்கீடு செய்யப்படாமல் முந்தைய மாதம் மின்நுகர்வோர் செலுத்திய தொகையைச் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. இவ்வாறு வசூல் செய்யப்படும் தொகை அடுத்து வரும் மாத கணக்கெடுப்புத் தொகையில் சரிசெய்யப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஆனால் ஊரடங்கு கால கட்டத்தில் வீட்டு மின்நுகர்வு அதிகரித்துள்ளதால் மின் கணக்கெடுப்பு நடத்தும் பொழுது அதிக கட்டணம் வரும் நிலையில் மின்வாரியம் முந்தைய மாத கட்டணத்தை மட்டுமே கழித்து யூனிட்டை கழிப்பதில்லை என்று ஊடகங்களில் வரும் செய்தி தவறானதாகும். மேலும் நடிகர் பிரசன்னா மின்வாரியம், ஊரடங்கு காலகட்டம் நிறைவடைந்த பின்பு மின் கணக்கெடுப்பு என்ற முறையில் கொள்ளை அடிப்பதாகத் தவறான செய்தியை வெளியிட்டுள்ளார்.

இந்த கணக்கெடுப்பு முறையானது தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிகளின்படி நடைமுறைப்படுத்தப்படுவதால் நடிகர் பிரசன்னா தமிழ்நாடு மின்சார வாரியத்தை கடும் சொற்களால் குற்றம்சாட்டுவது கண்டிக்கத்தக்கதாகும்.

பிரசன்னா வீட்டில் இரண்டு மின் இணைப்புகள் உள்ளன. மின் இணைப்பு எண்.328-010-60 மற்றும் 328-010-61. இந்த மின் இணைப்பு எண்.328-010-60-ஐ கணக்கீடு செய்ததில் ஜனவரி மாதம் யூனிட் 2280 மின் நுகர்வுக்கு ரூ.13,528/-ஐ செலுத்தியுள்ளார். மார்ச் மாதம் ஊரடங்கு அறிவிப்பால் கணக்கீடு செய்ய முடியாத நிலையில் முந்தைய மாத கட்டணமான ரூ.13,528/- நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த கட்டணம் இதுவரை மின்வாரியத்திற்குச் செலுத்தப்படவில்லை.

மேற்கண்ட மின் இணைப்பில் மே மாதம் நான்கு மாதங்களுக்கான மொத்த நுகர்வு 6920 யூனிட் என்று கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த 6920 யூனிட்டை மொத்தமாகக் கணக்கிட்டால் இதற்கான கட்டணம் ரூ.44,152/- ஆகும்.

ஆனால் செய்தி குறிப்பில் கூறியுள்ளபடி 6920 யூனிட்டானது இரண்டு மாத மின் கணக்கெடுப்பு அடிப்படையில் இரு இரண்டு மாத நுகர்வாகப் பிரிக்கப்பட்டு 3460 யூனிட், வீதப்பட்டியலின்படி (Tariff Salab) மின் கட்டணம் கணக்கிடப்பட்டுள்ளது.

3460 யூனிட்டுக்கான மின் கட்டணம் ரூ.21,316/- ஆகும். ஆக இரண்டு 3460 யூனிட்டுக்கான மின் கட்டணம் ரூ.42,632/- ஆகும். இவற்றில் முந்தைய மாத கட்டணம் ரூ.13,528/- கழிக்கப்பட்ட பின் ரூ.29,104/- மட்டுமே மே மாத கட்டணமாக வசூலிக்கப்படும். ஆனால் நடிகர் பிரசன்னா முந்தைய மாத கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்ட ரூ.13,528/-ஐ செலுத்தாத காரணத்தினால் அவர் மொத்தமாகச் செலுத்த வேண்டிய தொகை ரூ.42,632/- ஆக உள்ளது.

இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை, வழக்கமான நடைமுறை கணக்கெடுப்பு முறையில்தான் கணக்கீடு செய்யப்பட்டு வருகிறது.

ஆகவே மின்சார வாரியத்தால் மின் கட்டணம் கணக்கீடு செய்யப்படும் பொழுது, நான்கு மாத மின் நுகர்வு இரு இரண்டு மாத மின் நுகர்வாகப் பிரிக்கப்பட்டு அதற்கான வீதப்பட்டியலில் (Bi-monthly Slab) மின் கட்டணம் கணக்கிடப்பட்டு, முந்தைய மாத கட்டணம் கழிக்கப்பட்டபின் மின் கட்டண தொகை கணக்கிடப்படுகிறது. இதைக் கருத்தில் கொள்ளாமல், முந்தைய மாத யூனிட்டை கழிக்காமல் தொகையை மட்டுமே கழிக்கப்படுகிறது என்ற செய்தி தவறானதாகும். பொதுமக்கள் தங்களது கணக்கீட்டு முறையில் சந்தேகங்கள் இருந்தால் சம்பந்தப்பட்ட பிரிவு அலுவலகத்தை அணுகி தங்களது சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளலாம். மற்றும் கணக்கீடு செய்யப்படும் முறை தமிழ்நாடு மின்சார வாரியத்தின் www.tangedco.gov.in என்ற இணையதளத்திலும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது” என விளக்கமளித்துள்ளது.