முடிந்தது தேர்தல்! வெளியாகிறது கருத்துக் கணிப்புகள்!

Photo of author

By Sakthi

இன்று மாலை ஏழு மணியுடன் மேற்கு வங்காளத்தில் எட்டாம் கட்ட மற்றும் கடைசி கட்ட தேர்தல் முடிவுக்கு வருகிறது. ஆகவே தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு படி தமிழ்நாடு, புதுவை, கேரளா, அசாம் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தலுக்கு பிந்தைய எக்ஸிட் போல் எனப்படும் கருத்துகணிப்பு இன்று இரவு ஏழு முப்பது மணிக்கு வெளியாவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தமிழகம், புதுவை, அசாம், கேரளா, ஆகிய மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் ஏற்கனவே கடந்த 6-ஆம் தேதியுடன் முடிவடைந்து இருக்கின்ற நிலையில், மேற்குவங்க மாநிலத்தில் மட்டும் எட்டு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டு இன்றைய தினம் கடைசி கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. எல்லா மாநிலங்களின் தேர்தலுக்கான வாக்குப்பதிவு மே மாதம் இரண்டாம் தேதி எண்ணப்படுகிறது என்று தேர்தல் ஆணையம் முன்னரே அறிவித்து இருக்கிறது.

மேற்கு வங்க மாநிலத்தில் இன்று நடைபெறும் கடைசி கட்டத்தில் மாலை ஆறு முப்பது மணியுடன் நிறைவு பெறுகிறது. இந்த நிலையில், ஒரு மணி நேரத்திற்கு பின்னர் இரவு சுமார் ஏழு முப்பது மணி அளவில் எக்சிட் போல் எனப்படும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு ஆய்வறிக்கைகள் வெளியிடலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
ஒரு மாநிலத்தின் கருத்துக்கணிப்பு முடிவுகள் மற்ற மாநில தேர்தல் மீது எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்திவிடக் கூடாது என்ற காரணத்திற்காக, தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிடுவதற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்து இருந்தது.

தமிழகத்தை பொறுத்தவரையில் மொத்தம் இருக்கின்ற 234 சட்டசபை தொகுதிகளுக்கும் நடைபெற்ற தேர்தலில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் என்ன என்பதை இன்றைய தினம் பிரபல செய்தி நிறுவனங்கள் வெளியிட இருக்கின்றன. இந்த தேர்தலில் திமுக கூட்டணி மிகப் பெரிய வெற்றியைப் பெறும் என்றும், மற்ற கூட்டணிகள் 50 இடங்களுக்கும் குறைவாகவே வெற்றிபெறும் என்றும் திமுகவின் தேர்தல் ஆலோசகராக பணிபுரிந்த பிரசாந்த் கிஷோர் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.

ஆனால் அதிமுகவைப் பொறுத்தவரையில் கடந்த 2016ஆம் ஆண்டு தேர்தலிலும் கூட இவ்வாறு தான் தேர்தலுக்கு பிந்தைய முடிவுகள் திமுகவிற்கு சாதகமாக இருந்து வந்தன. ஆனால் மக்களுடைய முடிவுகள் வேறு மாதிரியாக இருந்தன என்று குறிப்பிடுகிறார்கள்.அதாவது கடந்த 2016ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் பல செய்தி நிறுவனங்கள் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் ஆளுங்கட்சியான அதிமுக மிக சுமாரான இடங்களிலே மட்டும்தான் வெற்றி பெறும் என்றும், திமுக நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமையும் என்றும், தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதோடு பிரபலமான செய்தி நிறுவனங்களான இந்தியா டுடே ஆக்சிஸ் எக்ஸிட் போல் முடிவில் கூட அதிமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு 132 இடங்கள் கிடைக்கும் எனவும் அதிமுக 99 இடங்களில் வெற்றி பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் சி ஒட்டர்ஸ் நிறுவனம் சார்பாக நடைபெற்ற கருத்துக் கணிப்பில் அதிமுக கூட்டணி 139 இடங்களை பெற்று ஆட்சியை தக்க வைக்கும் என்றும் திமுக கூட்டணி 78 இடங்கள் வரை வெற்றிபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இப்படி கடந்த சட்டசபை தேர்தலில் அனேக செய்தி நிறுவனங்களும் திமுகவிற்கு ஆதரவாகவே தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட்டனர். ஆனால் தேர்தல் முடிவு வெளிவந்த சமயத்தில் கருத்து கணிப்புகள் அனைத்தும் பொய்யாகிப் போயின. ஆனால் சி ஓட்டர்ஸ் நிறுவனத்தின் கருத்துக்கணிப்பு மட்டும் தேர்தல் முடிவில் அப்படியே பிரதிபலித்தது.

அதேபோல தற்போது நடைபெற்று இருக்கும் சட்டசபைத் தேர்தலுக்கான கருத்துக்கணிப்பு முடிவுகளையும் வெளியிடுவதற்கு செய்தி நிறுவனங்கள் அனைத்தும் தயார் நிலையில், இருக்கின்றன.எந்த கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் என்று தமிழக மக்கள் ஏற்கனவே முடிவு செய்துவிட்டனர். ஆனால் அந்த முடிவுகளை அறிவிப்பதற்கு இன்னும் இரண்டு தினங்களில் நடுவில் இருக்கின்றன. அதற்குள் இதுபோன்ற கருத்துக்கணிப்புகள் வெளியிடுவது வழக்கம்தான் என்று சொல்கிறார்கள்.