இனிமேல் இபாஸ் இல்லாமல் கொடைக்கானலின் மலைப்பகுதிக்கு சுற்றுலா செல்லலாம் என உதவி ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்தது. நாட்டின் பொருளாதாரத்தையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் கருத்தில் கொண்டு ஊரடங்கில் அவ்வபோது தளர்வுகள் அது விற்கப்பட்டு வந்தது. அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வர அம்மாவட்ட ஆட்சியர் அனுமதி அளித்தார். முதற்கட்டமாக பிரையண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா, ரோஜா பூங்கா ஆகியவை திறக்கப்படும் என்றும், வெளிமாவட்டங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் இ-பாஸ் பெற்று வரவேண்டும் என்றும், உள்மாவட்ட பயணிகள் அடையாள அட்டையை பயன்படுத்தி சுற்றுலா செல்லலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கொடைக்கானல் மலைப்பகுதிக்கு பேருந்துகளில் இ-பாஸ் இன்றி சுற்றுலா செல்லலாம் என்று உதவி ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும், கொடைக்கானலில் உள்ள வெள்ளி நீர்வீழ்ச்சி பூங்காவிற்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி வழங்கப்படுவதாகவும் கொடைக்கானலில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் படிப்படியாக திறக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.