Thiruchendur: திருச்செந்தூர் சுவாமி சுப்பிரமணிய கோவிலில் முருகனை தரிசிக்க சென்ற பெண்கள், கடலில் குளிக்க சென்றபோது ராட்சத அலைகள் ஏற்பட்டு 2 பேரின் கால் எலும்புகள் முறிந்தது.
திருச்செந்தூர் கோவிலுக்கு தினமும் ஆயிரம் கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். ஏனெனில் ஆறுபடை வீடுகளில் கடற்கரையில் அமைந்துள்ள கோவில் திருச்செந்தூர் கோவில் தான். இது சூரபத்மனை முருகன் வதம் செய்த தலம் ஆகும். சண்முகர் வடிவில் முருகன் அருள் பாலிக்கும் தலம் ஆகும். இந்த நிலையில் இன்று காலையில் இருந்து அங்குள்ள கடற்கரையில் அலைகள் சற்று கடுமையாக இருந்தது.
இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் முதல் கடற்கரையில் புனித நீராடிய பிறகு முருகனை தரிசிக்க செல்வார்கள். அதே போல் தான் இன்றும் பக்தர்கள் புனித நீராடி முருகனை தரிசித்து சென்றார்கள். அப்போது யாரும் எதிர்பார்க்காத விதமாக ராட்சத அலை எழுந்ததில், அந்த அலைகளில் மாட்டி இரண்டு பெண்கள் கீழே விழுந்ததில் அவர்களுக்கு காலில் உள்ள எலும்புகள் முறிந்து விட்டதாக கூறப்படுகிறது.
அவர்களை மீட்டு பாதுகாப்பு பணியாளர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுள் ஒருவர் காரைக்குடியை சேர்ந்தவர் வயது 50, அவர் பெயர் சிவகாமி. மற்றொருவர் சென்னையை சேர்ந்தவர் வயது 40, அவரின் பெயர் கீர்த்தனா என குறிப்பிடப்படுகிறது. இவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோவில் நிர்வாகம் கடலில் குளிக்கும் போது பக்தர்கள் மிகுந்த பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவித்துள்ளனர்.