சேலம் மாவட்டத்தில் பெண் ஒருவர் தனது கணவன் வீட்டின் முன்னால் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் கொங்கணாபுரம் என்ற பகுதியில் வாழ்ந்து வந்தவர் தமிழ்ச்செல்வி. இவர் மணிகண்டன் என்பவரை காதலித்து வந்துள்ளார். வீட்டில் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டை விட்டு வெளியேறி ஈரோடு பகுதியில் தனியாக வீடு எடுத்து வாடகைக்கு குடியிருந்து உள்ளனர்.
பின் தமிழ்ச்செல்வியின் வீட்டில் அவரது திருமணத்திற்கு ஒத்துழைப்பு அளித்து தமிழ் செல்வியுடன் பேசி வந்துள்ளனர். அதனால் அவருக்கு 30 சவரன் நகையும் வரதட்சணையாக போட்டுள்ளனர்.
திருமணத்திற்குப் பிறகு மணிகண்டன் எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். மேலும் ஆன்லைன் ரம்மி விளையாட்டு அடிமையாகி அதை எப்பொழுதும் விளையாடிக் கொண்டு இருந்துள்ளார்.
இந்நிலையில் மணிகண்டன் எப்பொழுது தமிழ்ச்செல்வியின் அப்பா வீட்டிற்கு சென்றாலும் அப்பொழுதெல்லாம் தமிழ்ச்செல்வியின் அப்பாவின் வங்கி கணக்கில் இருந்து பணம் காணாமல் போயுள்ளது. இதனால் சந்தேகமடைந்த தமிழ்ச்செல்வி மணிகண்டனிடம் கேட்ட பொழுதெல்லாம் சண்டை வந்துள்ளது.
மேலும் சந்தேகம் அடைந்த தமிழ்ச்செல்வி அவரது 30 சவரன் நகைகளை பரிசோதித்தபோது அனைத்தும் கவரிங் நகைகள் ஆக இருந்துள்ளது. இதனால் கணவனை விட்டு வெளியேறி மணிகண்டன் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
விசாரணையில் மணிகண்டன் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு அடிமையானவர் என தெரியவந்துள்ளது. அதனால் பணத்தை வைத்து தோற்ற பொழுதெல்லாம் மனைவியின் நகைகளை வைத்து விளையாடி மறுபடியும் தோற்றதால் அந்த நகைகளுக்கு பதிலாக போலி நகைகளை வைத்து உள்ளார்.
விற்ற நகைகளை 6 மாதத்தில் திருப்பி தருகிறேன் என்று போலீசார் முன்னிலையில் பேப்பரில் எழுதி கொடுத்துள்ளார். ஆனால் இன்னும் நகை வந்தபாடில்லை. மேலும் மணிகண்டன் தலைமறைவாகியுள்ளார்.
இதனால் தனது நகைகளை கேட்டு தமிழ்ச்செல்வி மணிகண்டன் வீட்டின் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.