இந்திய ராணுவ எல்லையில் பணிபுரிந்த ராணுவ வீரரின் உடல் புதைந்து எட்டு மாதத்திற்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட செய்தி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் எல்லையில் 36 வயதான ராஜேந்திர சிங் நேகி என்பவர் ஹவில்தாராக ராணுவத்தில் பணியாற்றி வந்துள்ளார். இவர் குல்மார்க் எனும் பகுதியில் கடந்த ஜனவரி மாதம் பணியில் இருந்தபோது கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டிருந்தது.
இந்த பனிப்பொழிவினை அடுத்து ராஜேந்திர சிங் நேகி காணாமல் போனார். இதைத்தொடர்ந்து அவரை கண்டுபிடிக்க ராணுவம் மற்றும் போலீசார் குழு அமைத்து தேடுதல் பணிகளில் ஈடுபட்டனர்.
இருந்தபோதும், எங்கு தேடியும் ராஜேந்திர சிங் நேகியின் உடல் கண்டுபிடிக்கப்பட முடியவில்லை. இதனையடுத்து அவர் வீர மரணம் அடைந்ததாக கடந்த ஜூன் மாதமே அறிவிக்கப்பட்டது.
இதன்பிறகு தற்போது, பனிப்பொழிவில் சிக்கி உயிரிழந்த அவரது புதைந்த உடல், காஷ்மீர் எல்லைப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனை செய்து அவரது குடும்பத்தினருக்கு ராணுவத்தின் சார்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.