கோவை, மயிலாடுதுறை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களிலிருந்து ரயில்கள்!

0
108

ஊரடங்கில் தளர்த்தல் ஏற்பட்டு கடந்த 12ஆம் தேதி முதல் பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

இதில் முதற்கட்டமாக 30 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. அதில் டெல்லியில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து டெல்லிக்கும் ஒரு ரயில் இயக்கப்பட்டது.

இந்நிலையில் சென்னயில் கொரோனா தொற்று அதிமகாக இருப்பதால் மே 31 வரை தமிழகத்தில் ரயில்களை இயக்க வேண்டாம் என முதலமைச்சர் பழனிசாமி பிரதமரின் ஆலோசனை கூட்டத்தில் கேட்டுக்கொண்டதால் சென்னைக்கு இயக்கப்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.

அதனைத் தொடர்ந்து வரும் ஜூன் ஒன்றாம் தேதி முதல் நாடு முழுவதும் 200 பயணிகள் ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே அட்டவணையை வெளியிட்டது. அதில் தமிழகத்திற்கு ரயில் ஏதும் அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், தமிழகத்திற்குள் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் குளிர்சாதன வசதி இல்லாத ரயில்களை இயக்குமாறு ரயில்வேயை தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது. சென்னையிலுள்ள சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ரயில் நிலையங்களை தவிர்த்து பிற ரயில் நிலையங்களிலிருந்து ரயில்களை இயக்கலாம் என்றும் ஆலோசனையை கூறியுள்ளது.

அதன்படி முதற்கட்டமாக 4 ரயில்களை இயக்க ரயில்வே வாரியத்திடம் தெற்கு ரயில்வே அனுமதி கேட்டுள்ளது.

அதன்படி கோயமுத்தூர் – மயிலாடுதுறை இடையே ஜன சதாப்தி சிறப்பு ரயிலை இயக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மதுரை – எழும்பூர் இடையே இயக்கப்படும் வைகை விரைவு ரயிலை விழுப்புரம் வரை மட்டும் இயக்கவும் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. திருச்சியிலிருந்து திருவனந்தபுரத்திற்கு இயக்கப்படும் இன்டர்சிட்டி ரயிலை நாகர்கோயில் வரை இயக்கவும் ஆலோசனை கூறப்பட்டுள்ளது.

கோயமுத்தூர் – சென்னை சென்ட்ரல் இன்டர்சிட்டி ரயிலை காட்பாடி வரை இயக்கவும் ஒப்புதல் வழங்க வேண்டும் என்ற பரிந்துரையும் ரயில்வே வாரியத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அதி விரைவில் முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Previous articleபுதிய வழிகாட்டுதல் விதிப்படி சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர் கொரோனாவால் பலி – அதிர்ச்சியில் உறவினர்கள்
Next articleஇந்தியா – ஒரே நாளில் புதிய உச்சத்தை தொட்ட கொரோனா தொற்று