குட் நியூஸ்! இனி ரயில் கிளம்பும் 5 நிமிடத்திற்கு முன்பு கூட டிக்கெட் பெறலாம்!!

Photo of author

By Parthipan K

இன்று முதல் ரயில் புறப்படுவதற்கு 5 நிமிடத்துக்கு முன்பு வரை டிக்கெட் பெறலாம் என ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் ரயில் போக்குவரத்து சேவை அனைத்தும் முடக்கப்பட்டன. பின்னர், ஊரடங்கில் அவ்வபோது சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்த நிலையில், மீண்டும் ரயில் சேவை தொடங்கியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக ரயில் புறப்படுவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பு முன்பதிவு நடைபெற்று வந்தது.

இந்நிலையில், பண்டிகை காலத்தை முன்னிட்டு பழைய நடைமுறையே பின்பற்றப்படும் என ரயில்வே வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று (அக். 10) முதல் ரயில் புறப்படுவதற்கு 5 நிமிடத்துக்கு முன்பு வரை ஆன்லைனில் அல்லது கவுண்டரில் பயணிகள் தங்கள் பயண டிக்கெட்டுக்களை முன்பதிவு செய்து பெற்று கொள்ளலாம் என ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக ரயில்வே துறைக்கு ஏற்பட்டுள்ள இழப்பை ஈடுகட்டும் வகையிலும், ரயில் புறப்படும் நேரத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்காகவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிக்கெட் கட்டணத்தை திரும்பப்பெறும் விதிமுறைகளின்படி இந்த காலகட்டத்தில் டிக்கெட்டுகளை ரத்து செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு இன்று முதல் அமலுக்கு வருவதாக அறிவித்துள்ள ரயில்வே வாரியம் இன்று முதல் இரண்டாவது சார்ட் 5 நிமிடத்திற்கு முன்பாக வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளது.