காவல்துறையினர் இடமாற்றம் – பேரவையில் விவாதம்!

Photo of author

By Savitha

காவல்துறையினர் இடமாற்றம் – பேரவையில் விவாதம்.

எதிர்க்கட்சிகள் ஆதாரத்துடன் குற்றச்சாட்டுகளை முன் வைத்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் காவல்துறை மானிய கோரிக்கை மீது பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன், காவல்துறையினர் வேறு இடங்களுக்கு மாற்றப்படுவதாக குறிப்பிட்டார்.

இதற்கு குறுக்கிட்டு பேசிய தமிழ்நாடு முதலமைச்சர், காவல்துறையினர் எல்லாம் தூக்கி அடிக்கப்படுகிறார்கள் என ஒரு குற்றச்சாட்டை உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் வைத்துள்ளார் என்றும், யார் அப்படி தூக்கி அடிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று ஆதாரத்துடன் கூறினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.

மேலும், ஆதாரத்தோடு சொல்லுங்கள் அதை வேண்டாம் என்று நாங்கள் சொல்லவில்லை என குறிப்பிட்ட முதலமைச்சர்,குறைகளை சொன்னால் அதனை நிவர்த்தி செய்ய வேண்டும் என்று தான் மக்கள் தங்களை இங்கு உட்கார வைத்திருக்கிறார்கள் என்றும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தாராளமாக குறை சொல்லுங்கள் ஆனால் ஆதாரத்துடன் சொல்லுங்கள் அதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி, உறுப்பினர் கேள்வி எழுப்பி இருக்கிறார், முதலமைச்சர் அதற்கு பதில் தெரிவித்துள்ளார் அத்துடன் முடிந்து விட்டது என கூறினார்.

தொடர்ந்து பேசிய முதலமைச்சர், முடிந்துவிட்டது என அதிமுக கொறடா கூறுகிறார் ஆனால் மீண்டும் அதே கேள்வியை தான் உறுப்பினர் எழுப்புகிறார், எதை கூறுவதாக இருந்தாலும் எதிர் கட்சியினர் ஆதாரத்துடன் கூறட்டும் என தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக ஆட்சி அமைத்த பிறகு காவல்துறை குடும்பத்தினரிடம் இருந்து மூன்று முறை மனுக்கள் பெறப்பட்டுள்ளதாகவும்,அதற்கு இன்னும் தீர்வு கிடைக்கவில்லை என்றும், அவர்களின் குடும்ப குத்து சூழல் காரணமாக அவர்களின் குழந்தைகள் கல்வி கற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், இதனையே அதிமுக உறுப்பினர் குறிப்பிட்டு பேசினார் என்றும் விளக்கினார்.

தொடர்ந்து பேசிய முதலமைச்சர், எதிர்கட்சித்தலைவரும் முதலமைச்சராக இருந்தவர் தான் காவல்துறையை கையில் வைத்துக் கொண்டிருந்தவர் தான், அவருக்கு தெரியாதது எதுவும் இருக்காது என கூறிய முதலமைச்சர் ஏதேனும் தவறுகள் நடைபெற்றிருந்தால் மாற்றப்படுவார்கள் ஆனால் பொள்ளாச்சி ஜெயராமன் கூறுவது போல் தூக்கி அடிப்பது , பழி வாங்குவது, அரசியல் ரீதியாக செய்வது என்பது இந்த ஆட்சியில் ஒருபோதும் நடக்காது. வேண்டும் என்று திட்டமிட்டு காவலர்கள் மாற்றப்பட மாட்டார்கள்.

விருப்பத்தின் அடிப்படையில் காவலர்கள் மாற்றத்திற்கு முகாம் நடத்தப்பட்டு அதன் அடிப்படையில் காவலர்கள் மாற்றம் செய்யப்படுகின்றனர் என்று குறிப்பிட்டார். கொடுக்கப்படும் விண்ணப்பத்தின் அடிப்படையில் படிப்படியாக காவலர்கள் விரும்பும் இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு வருவதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.