சபரி மலை ஐயப்பன் கோவில் திறப்பு – திருவாங்கூர் தேவசம் ஆலோசனை

Photo of author

By Parthipan K

பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் மாலை அணிந்து சபரிமலைக்கு செல்வது பக்தர்கள் வழக்கம். அந்த காலகட்டத்தில் மகர ஜோதி வரை பக்தர்கள் வழிபாட்டுக்காக ஐப்பன் கோவிலின் நடை திறந்து வைக்கப்படும். அதன் பின்னர் சாத்தப்படும். அதன் பிறகு ஒவ்வொரு மாத பிறப்புக்கும் கோவில் திறக்கப்படும். இவ்வாறு நடை திறக்கும் போது மாதா மாதம் செல்லும் ஐயப்ப பக்தர்கள் ஏராளமாக உள்ளனர்.

கொரோனா நோய் பரவல் காரணமாக மார்ச் மாத பிறப்புக்கு பக்தர்கள் வழிபாட்டிற்காக திறக்கப்பட்ட ஐயப்பன் கோவில், பொது முடக்கம் காரணமாக ஏப்ரல் மற்றும் மே மாதம் பக்தர்கள் வர அனுமதியில்லை என அறிவித்திருந்தது. இந்நிலையில் ஜூன் 8ம் தேதி முதல் மத்திய அரசின் வழிகாட்டுதல் அறிவுறுத்தலின் பேரில் கோவில்கள் மற்றும் வணிக வளாகங்கள் திறக்கப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து ஜூன் மாதம் 9ம் தேதி சபரி மலை ஐயப்பன் கோவில் திறக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. அவ்வாறு பக்தர்களை வழிபாட்டுக்கு அனுமதிக்கும் போது நடைமுறைப்படுத்த வேண்டிய கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை திருவாங்கூர் தேவசம் போர்டு ஆலோசித்து வருகிறது.

இதில் ஒரு நாளைக்கு எத்தனை பக்தர்களை அனுமதிப்பது, சமூக இடைவெளி கடைப்பிடிப்பை எவ்வாறு உறுதி செய்வது உள்ளிட்ட வற்றை ஆலோசித்துள்ளனர். விரைவில் இது குறித்த அதிகார்வபூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.