மூன்று நாடுகளில் சுற்று பயணம்! இன்று தொடங்குகிறார் பிரதமர் மோடி அவர்கள்!!

Photo of author

By Sakthi

மூன்று நாடுகளில் சுற்று பயணம்! இன்று தொடங்குகிறார் பிரதமர் மோடி அவர்கள்!

ஜப்பான், பப்புவா நியூ கினியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு இன்று முதல் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று தகவல் கிடைத்துள்ளது.

ஜப்பானில் நடக்கும் ஜி7 உச்சி மாநாட்டிற்கு ஜப்பான் நாட்டு பிரதமர் புமியோ கிஷிடா அவர்கள் இந்தய பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை ஏற்று இன்று ஜப்பான் செல்லும் பிரதமர் மோடி அவர்கள் மே 21ம் தேதி வரை ஜப்பானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.உறுப்பு நாடுகளுடன் நடக்கும் இந்த ஜி7 உச்சி மாநாட்டில் ஸ்திரத்தன்மை, அமைதி, நீடித்த வளம் ஆகியவற்றை பற்றி பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பேசவுள்ளார். இந்த உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக தலைவர்கள் சிலருடன் இருதரப்பு சந்திப்புகளையும் மேற்கொள்ளவுள்ளார்.

உச்சி மாநாட்டிற்கு பிறகு ஜப்பானில் இருந்து மே 22ம் தேதி பப்புவா நியூ கினியா நாட்டிற்கு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் செல்கிறார். அந்நாட்டு பிரதமர் ஜேம்ஸ் மரேப் அவர்களுடன் இந்திய-பசுபிக் தீவுகளின் ஒத்துழைப்புக்கான கூட்டமைப்பின் மூன்றாவது உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கிறார்.

பிறகு பப்புவா நியூ கினியா நாட்டில் இருந்து மே 22ம் தேதி ஆஸ்திரேலியா நாட்டிற்கு செல்கிறார். அங்கு 24ம் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் அவர்களுடன் சேர்ந்து குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். 23ம் தேதி இந்திய வம்சாவளியினர் முன்னிலையில் உரையாற்றும் பிரதமர் மோடி அவர்கள் 24ம் தேதி ஆஸ்திரேலிய பிரதமர் அல்பானீஸ் அவர்களுடன் இருதரப்பு சந்திப்பை முடித்துவிட்டு அந்நாட்டு சி.இ.ஓக்கள் மற்றும் வர்த்தக தலைவர்களுடனும் பேச்சு வார்த்தை நடத்தவுள்ளார்.